Wednesday, August 24, 2022

விடுதலைப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய்

 விடுதலைப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய்....

   நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

   நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

     திமிர்ந்த ஞானச் செருக்கு..

என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு இலக்கணமாய் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில் அவதரித்த வீரப் பெண்மணி தான் ஜான்சி ராணி லட்சுமி பாய் அவரைக் குறித்து இங்கு காண்போம்.

தென்னிந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக வீரம் வழக்கமிட்ட பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் போல் வட இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்டி அடித்த விடுதலைப் போராட்ட வீராங்கனை தான் ஜான்சி ராணி லட்சுமி பாய் ஃ

ஆங்கிலேயர் ஆதிக்கம் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ஜான்சி என்ற பகுதியில் வீர மங்கை ஜான்சிராணி ஆங்கிலேயருக்கு எதிராக தாய் நாட்டின் விடுதலைக்காக முழக்கமிட்டார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் மௌரியபந்தர் மற்றும் பகீரதிபாய் என்ற தம்பதியினருக்கு 1828ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் நாள் ராணி லட்சுமி பாய் பிறந்தார்.இவருக்கு மணிகர்ணிகா என்று பெயர் சூட்டி மனு என்று செல்லமாக அழைத்தனர். நான்கு வயதாகும் போது தாயார் எதிர்பாராமல் இறந்து விட்டார். அதன்பின் தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்.

      'படிப்பு⸴ குதிரையேற்றம்⸴ வாள்ப்பயிற்சி போன்ற பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார். இக்காலப்பகுதியில் ஆண்மகனுக்கு நிகராக வீரத்துடன் இருந்த வீராங்கனையானார்.. வளரவளர மணிகர்ணிகாவின் எண்ணங்களும் செயல்களும் ஏனைய குழந்தைகளை விடப் பெரிதும் மாறுபட்டிருந்தது.

   இதனால் தன்னை மேலும் மெருகேற்றிக் கொள்ள தந்தையின் உறவினர் மகனான நானா சாஹிப்⸴ தாந்தியாதோப் போன்ற இளைஞர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டார். அடிமையாவதை விட போரிட்டு மடியலாம் என்று ஆங்கிலேயப் பெரும்படையை எதிர்க்க முடிவு செய்தனர்.இவர்களின் கூட்டணி பல முனைகளிலும் விரட்டி அடித்தது.பிற்காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பல வெற்றிகளையும் கண்டது..

   அக்காலத்தில் பின்பற்றப்பட்ட கொடூரமானகுழந்தை திருமண முறை சிறுமி லட்சுமிபாய்க்கும் நடந்தது. 14ஆவது வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜான்சியின் ராஜாவான கங்காதரராவ்வை மணமுடித்து அரியணை ஏறினார்.

மிக இளம் வயதிலேயே லட்சுமி பாய் ஜான்சியின் ராணியானார். ராணி வந்ததைக் கண்டு கொண்டாடி மகிழ்ந்த மக்கள் அவரை கடவுளாக பாவித்து அவருக்கு கடவுளின் பெயரைச் சூட்டினர். அன்றிலிருந்து மணிகர்ணிகா எனும் லட்சுமிபாய் ஐhன்சிராணி என அழைக்கப்பட்டார்.

   தாயின் மடியில் அமர்ந்து விளையாடும் வயதில் தாய்மை என்ற ஸ்தானத்தை அடைந்தார். ஆனால் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே இறந்துவிட்டது. 4 மாதக் குழந்தையை உடல் நலக்குறைவால் பறிகொடுத்து வாரிசு இல்லாமல் போனதென்று ராஜகுடும்பம் கலங்கியது.

இதன்பின் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து ஆனந்தராவ் எனும் குழந்தையை தத்தெடுத்து அக்குழந்தைக்கு தாமோதரராவ் எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஆனால் சொந்த மகனின் இறப்பு தந்தை கங்காதரராவை வாட்டியது. 1853 நவம்பர் 21 ஆம் நாள் அவரும் காலமானார்.

   தாமோதராவ் மன்னராக முடிசூட ஜான்சி மக்கள் விரும்பினர். ஆனால் இதனை விரும்பாத ஆங்கிலேயர் தமது தந்திரமான சட்டம் ஒன்றை கொண்டு வந்தனர்.. வாரிசுகளை தத்தெடுக்கக்கூடாது அப்படி தத்தெடுத்தால் அதற்கு ஆங்கிலேய ஆட்சியில் அனுமதி பெற வேண்டும். இல்லையென்றால் அந்த அரசு ஆங்கிலேயர் வசம் ஆகும் என்று சட்டத்தை இயற்றினர். இதை எதிர்த்து ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்ட நீதிமன்றத்துக்கு ஜான்சிராணி சென்று வழக்காடினார்.

    இந்நிலையில் ஜான்சியை சுற்றியுள்ள பிரதேசங்களை கைப்பற்றியது ஆங்கிலேய அரசு ஒவ்வொரு பிராந்தியங்களின் குறைகளையும் கண்டறிந்து அதன் மூலம் அவர்களைத் தாக்கிக் கைப்பற்ற தொடங்கியது. ஜான்சியின் அரியணையையும் கைப்பற்ற ஆங்கிலே அரசு ஜான்சியை நோக்கி படையெடுத்தது. அதனை அறிந்து கொண்டு ஒரு பெண்ணாக தனது மகனை காப்பாற்ற நினைத்த லக்ஷ்மி பாய் அரசியாக தன் மக்கள் அடிமையாகி விடக்கூடாது எனவும் உறுதியாக இருந்தார்.அதற்காக உயிரை விடவும் துணிந்தார்.

   ஜான்சி அரண்மனைக்குள் படைகள் தயார் நிலையில் இருந்தது ஆங்கிலேய கமென்டர் கூக்ரோஸ் படைகள் ஜான்சி நோக்கி வந்து போர் புரிந்தனர். ஆங்கிலேயர் 1858இல் ஆட்சியைக் கைப்பற்றினர்.

   தனியாக ஆங்கிலேயரை வீழ்த்த முடியாது என்பதால் அருகிலிருக்கும் அரசுகளுடன் இணைந்து அவர்களை எதிர்ப்போம் என எண்ணி கோட்டையை விட்டு வெளியேறினார் ஜான்சிராணி.

   கோட்டையை விட்டு வெளியேறினாலும் ஜான்சி அரசை பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். லட்சுமிபாய். தனது நிலைமையை வலுவாக்கி தொண்டர் படையை உருவாக்கினார். இதில் ஆண்கள் மட்டுமன்றி பெண்களின் பங்களிப்பும் இடம் பெற்றிருந்தது.தளபதிகளுடன் இணைந்து நேரடியாக களத்தில் இறங்கி சண்டையிட முடிவு செய்து தனது படைகளுடன் களத்தில் இறங்கினார். ஆங்கிலேயப் படையினர் கொடூரமாகவும்⸴ ஈவிரக்கமின்றியும் தாக்கினர்.

   ஆனாலும் ஜான்சி ராணி தயக்கமின்றி துணிவுடன் போராடினார். எது நடந்தாலும் வீரத்தை காட்டுவோம் என கூறி ஆங்கிலேயர்களின் பெரும்படையை எதிர்த்து நின்றார்..இந்நிலையில் ஆங்கிலேயப்படை சுதாரித்துக் கொண்டு கோட்டையைக் கைப்பற்றினர்.

தனது வளர்ப்பு மகன் காப்பாற்றப்பட வேண்டும் என்றும்⸴ தனது உடல் ஆங்கிலேயர் கைகளில் சிக்கக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருந்தார் .இதனால் புல்பாக் இடத்திலிருந்த ஒரு கோவிலில் தஞ்சமடைந்த ராணி தனது மகனை அங்கிருந்து அழைத்துச் செல்ல கட்டளையிட்டார். வீரர்கள் அழைத்துச் சென்ற பின்னர் “என்னை எரித்து விடுங்கள் என் சாம்பல் கூட எதிரிகளுக்கு கிடைக்க கூடாதுˮ எனக்கூறி வீரமரணம் அடைந்தார்.அந்தநொடி இந்தியாவின் வீர மங்கையான ராணி லட்சுமிபாயின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. இந்திய விடுதலைக்கான விதையாக அவர் மண்ணில் புதைந்தார்.

லட்சுமிபாய் களத்திலிருந்து போரிட்டதை நேரில் பார்த்த ஆங்கிலேயத் தளபதி “நாங்கள் சண்டையிட்ட போது குதிரையின் கடிவாளத்தை பற்களில் கடித்துக் கொண்டு இரு கைகளாலும் வாளேந்திப் போரிட்டதைப் பார்த்து திகைத்ததாகப்ˮ புகழ்ந்தார்.

ராணியின் வீரத்திற்கு மிகப்பெரும் மரியாதையாக சுபாஷ்சந்திரபோஸ் அவர்கள் பெண்களைக் கொண்ட படையை உருவாக்கி அதற்கு “ராணி லட்சுமி பாய்” எனப் பெயர் வைத்து பெருமைப்படுத்தினார்.

ஜான்சிராணி வாழ்ந்த அரண்மனை அருங்காட்சியமாக இயங்கி வருகின்றது. அவர் மறைந்த முக்பாக் என்ற பகுதி ராணியின் அடையாளச் சின்னமாக இன்றுவரை வீரத்தின் அடையாளமாகஒளி வீசி வருகின்றது. மேலும் ஜான்சி ராணியின் பெயரில் கல்வி நிலையங்கள்⸴ மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு இன்றளவும் அவர் நினைவுச் சின்னங்களாக அவரின் பெருமையை பறைசாற்றுகின்றன.

இவரது வாழ்க்கை என்பது ஓர் சரித்திரம் என்பது மட்டுமல்லாது வளரும் பெண் சமூகத்திற்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்துள்ளது என்றால் அதுமிகையாகாது.குறுகிய காலம் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும் அன்பு⸴ வீரம்⸴ ரௌத்திரம் என சிறப்புமிக்க குணங்களால் சாகா வரம் பெற்றார்.வரலாற்றில் அவர் பெயர் பொன்னெழுத்துகளால் பொறாக்கப்பட்டு விட்டது உலக உள்ளவரை வீரப் பெண்மணி ஜான்சி ராணியின் புகழும் நிலைத்திருக்கும்.