Thursday, February 22, 2024

பாவேந்தர் பாரதிதாசன்

 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (பேச்சுப்போட்டி)

செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும் நந்தா விளக்கே நாயகியே! - முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே! எழில்மகவே! எந்தம் உயிரே தமிழே உனக்கு என் முதல் வணக்கம் இங கே வீற்றிருக்கும் சான்றோர் பெருமக்களுக்கும் என்  போன்றவர்களுக்கும் என் தமிழ் வணக்கம்.இனி என் உரை தொடக்கம்.

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்..

 ஒற்றுமை உலகக் காண முரசு கொட்டிய புரட்சி கவிஞர்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

 தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..

என தமிழினை நேசித்த 

தமிழின் பெருங்காதலன்

எங்கள் வாழ்வும் வளமும்

 அங்காத தமிழென்று சங்கே முழங்கு

என்று சங்க நாதம் எழுப்பியவன்..

பாரதியின் மீது இருந்த பக்தியினாலும் பெரும் பற்றினாலும் கனகசுப்பிரத்தினம் என்ற தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொன்ற பாவேந்தரை பற்றிய சில துளிகள் தான் எனது இந்த சிற்றுரை..

படி படி அம்மா சொல்கிறார் அப்பா சொல்லுகிறார் ஆசிரியர் சொல்லுகிறார் ஆனால் எதைப் படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும் இதோ புரட்சி கவிஞர் சொல்கிறார் பாருங்கள்

சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி

 நூலைப்படி

காலையிற்படி கடும்பகல்படி 

மாலை இரவு பொருள் படும்படி 

நூலைப்படி! சங்கத் தமிழ் நூலைப் படி

  கற்பவை கற்கும்படி 

வள்ளுவர் கொள்கைப்படி

 கற்கத்தான் வேண்டும் அப்படி 

கல்லாதவர்கள் வாழ்வதெப்படி? 

நூலைப்படி! அறம்படி பொருளைப்படி

 அப்படியே இன்பம் படி

 இறந்த தமிழ் நான்மறை பிறந்ததென்று சொல்லும்படி 

நூலைப்படி! அகப்பொருள்படி அதன்படி புறப்பொருள்படி 

 சாதி என்னும் தாழ்ந்தபடி 

நமக்கெல்லாம் தள்ளுபடி

 சேதி அப்படி தெரிந்துபடி 

(நூலைப் படி)

ஆம் படி படி படிப்புதான் வா விண்ணை நோக்கி ஏற்றும் ஏன் இப்படி சமூக அவலங்களை அறுத்து எரியும் ஆயுதம் கல்விதான் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையை உருவாக்கும் உன்னத சக்தி கல்விக்கு தான் உண்டு.


ஏழை கோழையாக இருக்கும் வரைதான் இந்த நிலை இருக்கும். அவன் தாழ்ந்து குனிந்து பணிந்து வாழும் நிலையிலிருந்து நிமிரும் நிலை வரும். போது, ஒரே நொடியில் உலகம் மாறிவிடாதா எனக் கேட்கின்றார்.

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்

 உதையப்பராகிவிட்டால்

 ஓர்நொடிக்குள் ஓடப்பர்

 உயரப்பர் எல்லாம் மாறி

 ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ •

என்று என்று அதிகார வர்க்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.


எல்லா அடிமைத்தலைகளிலிருந்தும் தமிழினம் விடுதலை பெற வேண்டும் என்பது பாவேந்தரின் கனவு

 அதனால் தான் பாடினார்.

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு 

திறக்கப் பட்டது!

சிறுத்தையே வெளியில்வா! 

எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் 

புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்! 

நம்பினை பகலினை நள்ளிருள் என்றே 

சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு! 

சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!

இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?

கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்

பொய்வி ரித்து நம் புலன்கள் மறைத்துத்

தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,

வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?

மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்

புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்

வையம் ஆண்ட வண்டமிழ் மரபே

கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!

என்று போர் முரசு கொட்டியவன்.

இன விடுதலை, நாட்டு விடுதலை 

பெண் விடுதலை குறித்து புதுமையாக சிந்தித்ததால் தான் புரட்சிக் கவிஞன் என்று வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் போற்றப்படுகிறார்.

வாழ்க பாரதிதாசன் புகழ்! வளர்க தமிழ் நன்றி

Saturday, January 13, 2024

பொங்கல் வாழ்த்து கவிதை

 #பொங்கல் வாழ்த்து...

உலகிற்கு உணவளிக்கும் உழவர்கள் உண்மை உறவுகள்...

 என்னுயிர் தோழர்கள் ...

யாவருக்கும் 

தேனினும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!


இல்லங்கள் முன்

புதுக் கோலங்கள் வரைக..!

 கோலங்கள் முன்

நல் வாழ்த்துகள் தமிழில் சொல்க..!


தித்திக்கும் தமிழ் போல

 திக்கெட்டும் புகழ் பரப்பும்

 தமிழர் திருநாளை வணங்கி வரவேற்போம்..!


வாழ்த்துக்கள் 

இனிய பொங்கல் திருநாள் 

வாழ்த்துகள்..!


அகத்தினில் பேரன்பு பொங்கட்டும் நடத்தையில் நல்லறம் பொங்கட்டும் 

ஏழைகள் வாழ்வில் 

பேரின்பம் பொங்கட்டும் ..

வற்றாத செய்வம்..குன்றாத கல்வி குவாலயம் எங்கும் பொங்கட்டும்..!


விவசாயிகள் இல்லத்தில் வளமெல்லாம் பொங்கட்டும்

வரப்புயர்ந்து நீருயர்ந்து 

நெல்லுயர்ந்து 

வாழ்வுயர்ந்து 

விவசாயிகள் 

வாழ்வாங்கு வாழட்டும்..!


அன்பும் அறமும் 

அமுத சுரபியாய் பொங்கட்டும் ஆரோக்கிய வாழ்வும் 

ஆனந்த நிகழ்வும்

 அளவின்றி பொங்கட்டும்


போகி நெருப்பில் 

குப்பைகளோடு- மன

 குப்பைகளையும் போடுவோம்!

பொறாமையும் வெறுப்பும் வெந்து சாம்பலாகட்டும்

தீயவற்றையெல்லாம் தீயிக்கு 

கொடுப்போம்

தீஞ்சுவை கரும்பை பகைவருக்கும் 

தின்னக் கொடுப்போம்..!


மஞ்சள் கொத்தோடு 

மாவிலை தோரணம்

 தித்திக்கும் செங்கரும்பு 

வாழையும் கமுகம் 

வாசலில் வரவேற்க 

மனதை மயக்க மண்பானையில் 

பொன்னிற சர்க்கரையோடு

புது அரசி  பொங்கட்டும் 

பொங்கலோ பொங்கலென்று

புதுவாழ்வு பொங்கட்டும்!


நீர் இரைத்து

நிலம் கிழித்து

ஏர் உழுத

காளை மாடுகளை

கனிவுடன் வாழ்த்துவோம்..!


பொங்கல் பொங்க 

புது மணம் பொங்க ... பொங்க

 ஊரெல்லாம் பொங்க ....

ஒளி தந்த கதிரவனை - 

 எல்லோரும் வணங்குவோம்!


உணவு தந்த உழவனை 

ஊர் கூடி வாழ்த்துவோம்!



நன்றி சொல்வோம் 

நன்றி சொல்வோம் 

நல்லுணவு தந்த உழவனுக்கு !

நாள்தோறும் நன்றி சொல்வோம்..!!


பொன்.தாமோ