தோல்வி தோல்வி தோல்வி
தோல்வி மேல் தோல்வி
தொடர்கிறதா ....
வெற்றியை நெருங்கிவிட்டாய்
தொடர்ந்து பயணி ...
கண்டம் விட்டு கண்டம்
வரும் பறவைகள்
களைப்படைவதில்லை
தண்ணீர் தேடும் வேர்கள்
பாறைக்குள் பயணிக்க
தயங்குவது இல்லை
தொடர்ந்து பயணி....
காய்ந்த மரம் தான்
கடலில் மிதக்கும் கப்பலாகிறது
தங்கம் அல்ல
இரும்புதான்
கருவறையைக்
காக்கும் கதவாகிறது......
காய்ந்த ஓலைதான்
வீட்டின் உச்சியில் கூரை ஆகிறது
அடர்ந்த இருள்
சூழ்ந்த வானம் தான்
ஒளிமிக்க நிலவை
பிரசவிக்கிறது ....
தோல்விகளைச் சுமந்து சுமந்து
தோளை பலமாக்கு
அப்பொழுது தான்
வெற்றி மகுடத்தை
தாங்கும் சக்தியை
பெறுவாய்...
சரக் கொன்றை மரம்
இலைகளை உதிர்ப்பது
பட்டு போவதற்காக அல்ல
பூத்துக்குலுங்க......
சிங்கம் வேட்டை ஆடுவதற்கு
முதலில் தேவை
மான் அல்ல ... பசிதான் !
ஆம் ..இலட்சியத்தில்
பசியோடு இரு ...
தாகமாக இரு....
வேளை வரும் போது
வேட்டையாடு....
நீ தோற்பதற்காக பிறக்கவில்லை... நம்பு
சாதிப்பதற்காகப்
படைக்கப்பட்டுள்ளாய்....
No comments:
Post a Comment