Sunday, November 21, 2021

குமாரஸ்தவம்

 ஓம் ஷண்முக பதயே நமோ நம 

 (ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் ஷண்மத பதயே நமோ நம 

 (ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம 

 (ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம 

 (ஓம் ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் ஷட்கோண பதயே நமோ நம 

 (ஓம் அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் ஷட்கோச பதயே நமோ நம 

 (ஓம் ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் நவநிதி பதயே நமோ நம 

 (ஓம் ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் சுபநிதி பதயே நமோ நம 

 (ஓம் பேரின்பச் செல்வத்தின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் நரபதி பதயே நமோ நம 

 (ஓம் அரசர் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் சுரபதி பதயே நமோ நம 

 (ஓம் தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் நடச்சிவ பதயே நமோ நம 

 (ஓம் நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம 

 (ஓம் ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம் )

 

 ஓம் கவிராஜ பதயே நமோ நம 

 (ஓம் கவியரசர் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் தபராஜ பதயே நமோ நம 

 (ஓம் தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் இகபர பதயே நமோ நம 

 (ஓம் இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் புகழ்முனி பதயே நமோ நம 

 (ஓம் திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் ஜயஜய பதயே நமோ நம 

 (ஓம் மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் நயநய பதயே நமோ நம 

 (ஓம் மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் மஞ்சுள பதயே நமோ நம 

 (ஓம் அழகுருவான தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் குஞ்சரி பதயே நமோ நம 

 (ஓம் தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் வல்லீ பதயே நமோ நம 

 (ஓம் வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் மல்ல பதயே நமோ நம 

 (ஓம் மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் அஸ்த்ர பதயே நமோ நம 

 (ஓம் கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் சஸ்த்ர பதயே நமோ நம 

 (ஓம் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் ஷஷ்டி பதயே நமோ நம 

 (ஓம் சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் இஷ்டி பதயே நமோ நம 

 (ஓம் வேள்வித் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் அபேத பதயே நமோ நம 

 (ஓம் வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் சுபோத பதயே நமோ நம 

 (ஓம் மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் வியூஹ பதயே நமோ நம 

 (ஓம் சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் மயூர பதயே நமோ நம 

 (ஓம் மயூர நாதனுக்கு வணக்கம்)

 

 ஓம் பூத பதயே நமோ நம 

 (ஓம் பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் வேத பதயே நமோ நம 

 (ஓம் வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் புராண பதயே நமோ நம 

 (ஓம் புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் பிராண பதயே நமோ நம 

 (ஓம் ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் பக்த பதயே நமோ நம 

 (ஓம் அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் முக்த பதயே நமோ நம 

 (ஓம் பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் அகார பதயே நமோ நம 

 (ஓம் அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் உகார பதயே நமோ நம 

 (ஓம் உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் மகார பதயே நமோ நம 

 (ஓம் மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் விகாச பதயே நமோ நம 

 (ஓம் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் ஆதி பதயே நமோ நம 

 (ஓம் எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் பூதி பதயே நமோ நம 

 (ஓம் சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் அமார பதயே நமோ நம 

 (ஓம் மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்)

 

 ஓம் குமார பதயே நமோ நம 

 (ஓம் குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்)

Sunday, October 3, 2021

பட்டினத்தார் பாடல்

 பட்டினத்தார் அன்னையை இறுதி சடங்கில் பாடிய நெஞ்சை உருக்கும் பாடல்...


1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி ?


2.முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்

அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் – தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேன் ?


3. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும், தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டுவேன் ?


4. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ

மெய்யிலே தீமூட்டுவேன் ?


5. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு

வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள

தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ

மானே என அழைத்த வாய்க்கு ?


6. அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்

கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள

முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்

மகனே” என அழைத்த வாய்க்கு ?


7. முன்னை இட்ட தீ முப்புரத்திலே;

பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!


8. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்

ஆகுதே பாவியேன் ஐயகோ! – மாகக்

குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்

கருதி வளர்த்தெடுத்த கை.


9. வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்

வந்தாளோ! என்னை மறந்தாளோ – சந்ததமும்

உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன்

தன்னையே ஈன்றெடுத்த தாய் ?


10. வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்!

நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; – பால்தெளிக்க

எல்லீரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்

எல்லாம் சிவமயமே யாம்!

Sunday, September 26, 2021

நோயுற்று. அட ராமல.

 


திருப்போரூர் கந்தசாமி யிடம் சிதம்பர சுவாமிகள் வேண்டியது..…

"""''''''''''''''''''''''''''''''''''''''''''

நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல் 

பாயிற் கிடவாமல் பாவியேன் -காயத்தை 

ஓர்நொடிக்குள் நீக்கியெனை ஒண் போரூர் ஐயாநின்

சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து .

     -திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

Saturday, September 18, 2021

தமிழ்ச் சொல்வளம் பயிற்சி வினாக்கள்

                        பத்தாம் வகுப்பு

                        தமிழ்ச்சொல் வளம்

 பின்வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு விடை எழுது

1,.நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர்

 அ) பாரதிதாசன்   ஆ) பாரதியார்   இ) கவிமணி   ஈ) தேவநேயப்பாவாணர் 


2.இலக்கிய செம்மொழிகளுக்குப்  பொதுவானது 

 அ) சொல் வளம்   ஆ) பொருள் வளம்  இ) கற்பனைவளம்  ஈ) உவமை 


3.தமிழ்  அல்லாத  திராவிட மொழிகளில்  இல்லாதது.

 அ) பன்மொழி   ஆ)இலக்கணம்   இ) ஒரு பொருட் பல சொல்   ஈ) இலக்கியம்


4. கால்டுவெல் எழுதிய நூல்

அ) கனிச்சாறு   ஆ) கண்ணகி காப்பியம்  இ) திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்

ஈ) கண்ணகி புரட்சிக் காப்பியம்


5.நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி பகுதியைக் குறிப்பது

 அ) தண்டு ஆ) கோல் இ) தூறு  ஈ) தாள் 


6.தட்டு அல்லது தட்டை என்பது -----------தாவரத்தின் அடிப்பகுதியை குறிக்கும்.

அ) கரும்பு   ஆ) புளி ,வேம்பு  இ) கீரை ,வாழை  ஈ) கம்பு ,சோளம் 


7.சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும் ?

 அ) போத்து   ஆ) கொப்பு  இ) குச்சி ஈ) இணுக்கு


8.வெங்கழி  என்பது 

 அ) காய்ந்த குச்சி  ஆ) காய்ந்த சிறுகிளை  இ) காய்ந்த கழி  ஈ) காய்ந்த கொம்பும் கவையும் 

அடியும்


9. சோளம் ,கரும்பு  முதலியவற்றின் இலை

 அ) தோகை  ஆ) இலை  இ) தாள்  ஈ) சண்டு 


10.பூ விரியத் தொடங்கும் நிலை

 அ) அரும்பு   ஆ) போது  இ) வீ  ஈ) செம்மல்


 11. தமிழ் திரு. இரா. இளங்குமரனார் உருவாக்கியது ------------

  அ) திருவள்ளுவர் நூலகம்   ஆ) கம்பர் நூலகம்    இ) பாவாணர் நூலகம்    ஈ) இளங்கோ நூலகம்


12.கோல்  என்பது------------ பெயர்.

 அ) கிளைப்பிரிவு    ஆ) இலை வகை   இ) அடி வகை  ஈ) கொழுந்து வகை 


13.கரும்பின் அடி -----------

 அ) கழி   ஆ) கழை   இ) அடி   ஈ) தட்டு


14. இணுக்கு  என்பது -----------

 அ) கவையின் பிரிவு    ஆ) சினையின் பிரிவு   இ) போத்தின் பிரிவு  ஈ) குச்சியின் பிரிவு


15.காய்ந்த கொம்பும், கவையும் அடியும்-------

 அ) சுள்ளி   ஆ) கட்டை   இ) விறகு   ஈ) வெங்கழி


16.செம்மல்  என்பது ---------

 அ) அரும்பு   ஆ) செடியின் கிளை   இ) பூ வாடின நிலை   ஈ) பூவின் தோற்ற நிலை 


17.கரும்பின் நுனிப்பகுதி---------

 அ) துளிர்    ஆ) கொழுந்தடை  இ) குருத்து  ஈ) முறி 


18.தாவரங்களின் இலை வகைகளை குறிக்கும்  சொற்களுள்  பொருந்தாத ஒன்று--------

அ) தாள்  ஆ) ஓலை  இ) சருகு  ஈ) தளிர்


19. தண்டு என்பது ---------அடி.

 அ) நெல் ,கேழ்வரகு  ஆ) நெட்டி ,மிளகாய்   இ) கீரை, வாழை   ஈ) புளி ,வேம்பு 


20. இளங்குமரனார் எழுதிய நூல்களுள் ஒன்று .

 அ) சிலப்பதிகார உரை  ஆ) குண்டலகேசி உரை  இ) மணிமேகலை உரை    ஈ)சீவகசிந்தாமணி உரை

Friday, September 17, 2021

வல்லினம் மிகும் இடங்கள்

 வல்லினம் மிகும் இடங்கள்


இரண்டு சொற்களுக்கு இடையில் எங்கெல்லாம் க், ச், த், ப் ஆகிய வல்லெழுத்துக்கள் வருமோ அவ்விடங்களை வல்லினம் மிகும் இடம் என்று அழைக்கின்றோம் வல்லெழுத்து வர வேண்டிய இடங்களில் வல்லொற்று இடவில்லை என்றால் பொருளே மாறிவிடும்

எடுத்துக்காட்டாக கீழே உள்ள தொடரைப் பாருங்கள்....


குறிஞ்சி     பள்ளி

குறிஞ்சிப்பள்ளி

குறிஞ்சிப் பள்ளி

மேற்கண்ட மூன்று தொடர்களும் ஒரே போல் இருந்தாலும் மூன்றும் வெவ்வேறு பொருளைத் தருகின்றது.

i) குறிஞ்சி பள்ளி-குறிஞ்சி என்ற பெண் தூங்குகிறாள்

ii)குறிஞ்சிப்பள்ளி- தென்னைமரம்

iii) குறிஞ்சிப் பள்ளி-குறிஞ்சி என்ற பள்ளிக்கூடம்


பழமுதிர்சோலை

பழமுதிர்ச்சோலை

இதில் இதில் வரலாற்று இடாமல் எழுதினால் பழங்கள் உதிர்கின்ற சோலை என்று பொருள் படும்.

பழமுதிர்சசோலை-என்று வன்மத்துடன் எழுதினால் முதிர்ந்த பழங்களை உடைய சோலை என்று பொருள் தரும்.


அங்கு சென்றான்

அங்குச் சென்றான்

அங்கு சென்றான் -- என்பதில் வல்லொற்று இடவில்லை என்றால் அங்கு என்ற பெயரை உடைய பையன் சென்றான் என்று பொருளாகி விடும்.

அங்குச் சென்றான் என்று எழுதினால் மட்டுமே அவ்விடத்திற்குச் சென்றார் என்று பொருள் தரும்.

வல்லொற்று மிகும் இடங்கள்:-



1. அ, இ, உ என்னும் சுட்டு எழுத்துகளை அடுத்து வல்லினம் மிகும்

அ + காலம் = அக்காலம் 

இ+ கல்லம் = இக் காலம்

எ + திசை = எத்திசை 


2.அந்த, இந்த ,எந்த என்ற சொற்களின் பின் வல்லினம் மிகும்

அந்த + பையன் = அந்தப் பையன் 

எந்த + பொருள் = எந்தப் பொருள் 

.

3. அங்கு ,இங்கு, எங்கு என்ற சொற்களின் பின் வல்லினம் மிகும்

அங்கு + கண்டான் = அங்குக் கண்டான் 

எங்கு + போனான் = எங்குப் போனான் 


4. அப்படி, இப்படி, எப்படி என்ற சொற்களின் பின் வல்லினம் மிகும்

அப்படி + சொல் = அப்படிச் சொல் 

இப்படி + செய்= இப்படிச் செய்

எப்படி + சொல்வான் = எப்படிச் சொல்வான் 


5. ஓர் எழுத்துச் சொற்களின் முன் வல்லினம் மிகும்

கை + குழந்தை = கைக்குழந்தை 

தை + பொங்கல் = தைப்பொங்கல் 


6. வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகும்

பாக்கு + தோப்பு = பாக்குத் தோப்பு

அச்சு + புத்தகம் = அச்சுப்புத்தகம் 

எட்டு + தொகை = எட்டுத்தொகை 

பத்து + பாட்டு = பத்துப்பாட்டு 


7. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்துப் பெயர்ச்சொல் வந்தால் வல்லினம் மிகும்.

கன்று + குட்டி = கன்றுக்குட்டி  

மருந்து + சீட்டு = மருந்துச் சீட்டு 


8. சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்

விறகு + கடை = விறகுக்கடை 

படகு + போட்டி = படகுப்போட்டி 

பரிசு + புத்தகம் = பரிசுப்புத்தகம் 

மரபு + கவிதை = மரபுக்கவிதை


9. முற்றியலுகரச்(உகரம் முழுமையாக ஒலிக்கும் ) சொற்கள் முன் வல்லினம் மிகும்.

நடு + கடல் = நடுக்கடல் 

பொது + தேர்வு = பொதுத் தேர்வு

பொது + பணி = பொதுப்பணி 

பசு + தோல் = பசுத்தோல் 

திரு + கோயில் = திருக்கோயில் 

தெரு + பக்கம் = தெருப்பக்கம் 

உணவு + பொருள் = உணவுப்பொருள் 

உழவு + தொழில் = உழவுத்தொழில் 

நெசவு + தொழிலாளி = நெசவுத்தொழிலாளி 

தேர்வு + கட்டணம் = தேர்வுக்கட்டணம்


10. வேற்றுமை உருபு விரிந்து வருவது. இது வேற்றுமை விரி எனப்படும்.

இரண்டாம் வேற்றுமை விரியின் (ஐ உருபின்) முன் வரும் வல்லினம் மிகும்.

தந்தையை + பார்= தந்தையைப் பார்

அவளை + பார் = அவளைப்பார் 

அவனை +பார் அவனைப் பார்

பாயை + சுருட்டு = பாயைச் சுருட்டு 

கதவை + தட்டு = கதவைத் தட்டு 

மலரை + பறி = மலரைப் பறி


11. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

எனக்கு + கொடு = எனக்குக் கொடு 

ஊருக்கு + போனான் = ஊருக்குப் போனான்


12. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகும்.

குறிஞ்சி + தலைவன் = குறிஞ்சித் தலைவன்  (குறிஞ்சிக்குத் தலைவன்) 

படை + தளபதி = படைத்தளபதி (படைக்குத் தளபதி) 


13. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

தயிர் + குடம் = தயிர்க்குடம் (தயிரை உடைய குடம்) 

நகை + கடை = நகைக்கடை (நகையை விற்கும் கடை) 


14. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

இரும்பு + பெட்டி = இரும்புப் பெட்டி (இரும்பினால் ஆகிய பெட்டி)

தேங்காய் + சட்னி = தேங்காய்ச் சட்னி (தேங்காயால் ஆன சட்னி)


15. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும்.

கோழி + தீவனம் = கோழித் தீவனம் (கோழிக்கு உரிய தீவனம்) 

குழந்தை + பால் = குழந்தைப் பால் (குழந்தைக்கு ஏற்ற பால்)


16. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

வாய் + பாட்டு = வாய்ப்பாட்டு (வாயிலிருந்து வரும் பாட்டு) 

கனி + சாறு = கனிச்சாறு (கனியிலிருந்து எடுக்கப்படும் சாறு


17. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின், அதன் முன்னர் வரும் வல்லினம் மிகும்.

கிளி + கூண்டு = கிளிக்கூண்டு 

வாழை + தண்டு = வாழைத்தண்டு 


18. பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

சிவப்பு + துணி = சிவப்புத்துணி 

புதுமை + பெண் = புதுமைப்பெண் 


19இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள் 

வெள்ளி + கிழமை = வெள்ளிக் கிழமை 

மல்லிகை + பூ = மல்லிகைப்பூ 


20.உவமைத் தொகையில் வரும் வல்லினம்மிகும்.

மலர் + கண் = மலர்க்கண் (மலர் போன்ற கண்) 

தாமரை + கை = தாமரைக்கை (தாமரை போன்ற கை)


21. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்

செல்லா + காசு = செல்லாக் காசு (செல்லாத காசு)


20. அகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்

வர + சொன்னான் = வரச் சொன்னான் 

உண்ண + போனான் = உண்ணப் போனான் 

உட்கார + பார்த்தான் = உட்காரப் பார்த்தான்


21. இகர ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்

ஓடி + போனான் = ஓடிப் போனான் 

தேடி + பார்த்தான் = தேடிப் பார்த்தான் 

கூறி + சென்றான் = கூறிச் சென்றான் 

கூடி + பேசினர் = கூடிப் பேசினர்


22.யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்

போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்


23.குறிப்பு பெயரெச்சத்தில்  வல்லினம் மிகும்.

இனிக்க + பேசுவான் = இனிக்கப் பேசுவான் 

நன்றாக + சொன்னான் = நன்றாகச் சொன்னான் 

வேகமாக + கூறினான் = வேகமாகக் கூறினான் 

விரைவாய் + பேசினார் = விரைவாய்ப் பேசினார் .


24. ய்,ர்,ழ் ஆகிய மெய்களைத் தொடர்ந்து பெயர்ச்சொல் வந்தால் வல்லினம் மிகும்.

வாய் + சொல் = வாய்ச் சொல்

மலர் + கூந்தல் = மலர்க் கூந்தல்

தமிழ் + செல்வி = தமிழ்ச் செல்வி




வல்லினம் மிகா இடங்கள்

                              வல்லினம் மிகா இடங்கள்

                            இரண்டு சொற்களுக்கு இடையில் எங்கெல்லாம்  க், ச், த் , ப் ஆகிய வல்லின மெய் எழுத்துக்கள் வராதோ அவ்விடங்களை வல்லினம் மிகும் இடங்கள் ஆகும்.

   1. ‘அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும்              சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.

அவ்வளவு + பெரிது = அவ்வளவுபெரிது

இவ்வளவு + கனிவா = இவ்வளவு கனிவா?

எவ்வளவு + தொலைவு = எவ்வளவு தொலைவு?


2.  ‘அத்தனை, இத்தனை, எத்தனை’ - என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.

அத்தனை + புத்தகங்கள் = அத்தனை புத்தகங்கள்

இத்தனை + தொழில்களா = இத்தனை தொழில்களா?

எத்தனை + கருவிகள் = எத்தனை கருவிகள்?


3. ‘அஃறிணைப் பன்மை’ முன் வரும் வல்லினம் மிகாது.

பல + பசு = பல பசு

சில + கலை = சில கலை

அவை + தவித்தன = அவை தவித்தன


4. வினாப் பொருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என்னும் வினா எழுத்துகளின் பின்வரும் வல்லினம் மிகாது.

அவனா + கேட்டான் = அவனா கேட்டான்?

அவளா + சொன்னாள் = அவளா சொன்னாள்?

யாரே + கண்டார் = யாரே கண்டார்?


. வியங்கோள் வினைமுற்றுகளின் பின் வல்லினம் மிகாது.

கற்க + கசடற = கற்க கசடற

வெல்க + தமிழ் = வெல்க தமிழ்

வீழ்க + தண்புனல் = வீழ்க தண்புனல்


6. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் தவிர, மற்றப் பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது.

பெரிய + பெண் = பெரிய பெண்

கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்

அழியாத + கல்வி = அழியாத கல்வி


7. ‘எட்டு, பத்து’ ஆகியவை தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்வரும் வல்லினம் மிகாது.

ஒன்று + கேள் = ஒன்று கேள்

இரண்டு + புத்தகம் = இரண்டு புத்தகம்

மூன்று + குறிக்கோள் = மூன்று குறிக்கோள்

நான்கு + பேர் = நான்கு பேர்

ஐந்து + கதைகள் = ஐந்து கதைகள்

ஆறு + கோவில் = ஆறு கோவில்

ஏழு + சான்றுகள் = ஏழு சான்றுகள்

ஒன்பது + சுவைகள் = ஒன்பது சுவைகள்


8. ‘இரட்டைக் கிளவியிலும், அடுக்குத் தொடரிலும்’ வல்லினம் மிகாது.

கல + கல = கலகல

சட + சட = சடசட - இரட்டைக் கிளவிகள்

பள + பள = பளபள

தீ + தீ = தீதீ

பார் + பார் = பார்பார் ! – அடுக்குத்தொடர்கள்


9. ‘ஏவல் வினை’ முன் வரும் வல்லினம் மிகாது.

வா + கலையரசி = வா கலையரசி

எழு + தம்பி = எழு தம்பி


10. ‘மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஒடு, ஓடு’ ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

கோவலனொடு + கண்ணகி வந்தாள் = கோவலனொடு கண்ணகி 

வந்தாள்.

துணிவோடு + செல்க = துணிவோடு செல்க.

அண்ணனோடு + தங்கை வந்தாள் = அண்ணனோடு தங்கை வந்தாள்


11. “பொதுப் பெயர், உயர்திணைப் பெயர்களுக்குப்” பின்வரும் வல்லினம் மிகாது.

தாய் + கண்டாள் = தாய் கண்டாள்.

கண்ணகி + சீறினாள் = கண்ணகி சீறினாள்.


12. ‘ஐந்தாம் வேற்றுமையின் சொல் உருபுகளான இருந்து, நின்று’ என்பவைகளின் பின் வரும் வல்லினம் மிகாது.


மாடியிலிருந்து + கண்டேன் = மாடியிலிருந்து கண்டேன்.

மரத்திலிருந்து + பறித்தேன் = மரத்திலிருந்து பறித்தேன்.



13. “வினைத் தொகையில்” வல்லினம் மிகாது.

விரி + சுடர் = விரிசுடர்

பாய் + புலி = பாய்புலி


14. “உம்மைத் தொகையில்” வல்லினம் மிகாது.

காய் + கனி = காய்கனி

தாய் + தந்தை = தாய்தந்தை


15. ‘அது, இது’ என்னும் சுட்டுகளின் பின் வல்லினம் மிகாது.

அது + பறந்தது = அது பறந்தது.

இது + கடித்தது = இது கடித்தது.


16. ‘விளித் தொடரில்’ வல்லினம் மிகாது.

கண்ணா + பாடு = கண்ணா பாடு.

அண்ணா + கேள் = அண்ணா கேள் !


17. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘கள், தல்’ என்னும் விகுதிகள் வரும் பொழுது வல்லினம் மிகாது.

எழுத்து + கள் = எழுத்துகள்

கருத்து + கள் = கருத்துகள்

வாழ்த்து + கள் = வாழ்த்துகள்


18. ‘இரண்டு வட சொற்கள்’ சேரும் பொழுது வல்லினம் மிகாது.

கோஷ்டி + கானம் = கோஷ்டி கானம்

சங்கீத + சபா = சங்கீத சபா


Tuesday, May 18, 2021

சொந்த வீடு

என் வாடகை வீடு
குருவிகளுக்கு
சொந்த வீடு...!

 

கடவுள் எனும் முதலாளி


மண்ணின் மைந்தன்

 தாவரங்களின் தவப்புதல்வன் 

மாடுகளின் தோழன்

மரங்கள் காதலன்

மாடுகளின் தோழன்

ஆடுகளின் மேய்ப்பன்...!


ஈட்டிமுனையைவிட  இவன்

ஏர்முனை...கூர்மையானது 

போருக்குச் செல்பவன் அல்ல

 ஏருக்குச் செல்பவனே வீரன் 


கோயில்கள் விழுந்தாலும்

 கோபுரங்கள் சரிந்தாலும்

 நிமிர்ந்து விடும் உலகம்

 விவசாயி மடிந்தால்

 விவசாயம் அழிந்தால்...

 மனித இனம் மாண்டு விடும்

 மறுபடியும் எங்கே மீண்டு வரும்?


 ஊருக்கு எல்லாம் உணவளிப்பான்- தன் 

உணவுக்காக ஏங்கி தவிப்பான்

 தாகத்திற்கு இளநீர் கொடுப்பான்-தன் 

தாகம் தீர தவியாய் தவிப்பான்


 செவ்வாய்க்கு விஞ்ஞானம் சென்றாலும் - நம்

 வாய்க்கு சோறிடுவது இவன்தான்..!


 வறண்ட காடாயினும் 

உயர்ந்த  மேடாயினும்

 காய்ந்த நிலமாயினும்

 ஒட்டிய வயிறுடன்

ஓடி ஓடி உழைப்பான்..


வானம் மழை தர மறுத்தாலும்

 பூமி விலை தர மறுத்தாலும்

சாமி வரம் தர மறுத்தாலும

சளையாமல் உழைப்பான்..!


உழைப்பு உழைப்பு உழைப்பு

உழைப்புதான் இவனுக்கு மூச்சு

 இவனில்லையெனில் 

உலகுக்கே போச்சு போச்சு...!


#பொன்.தாமோ




கொரனா ஆத்திசூடி


 கொரனோ ஆத்திசூடி

1அஞ்சாமை நோய் குறைக்கும்

2ஆக்ஸிஜன் மதிப்புணர்

3 இஞ்சி மஞ்சள் தினம் உண்

4 ஈசல் அல்ல கரோனா

5 உணவை மருந்தாக்கு

6 ஊர் சுற்றாதே

7 எப்போதும் முகக் கவசம் அணி

8 ஏழைக்கு உதவு

9 ஒட்டிக்கொள்ளாது விலகி நில்

10ஐயோ எனச் சொல்லாதே

11 ஓலக்குரலுக்குச் செவிமடு

12.ஓளடதம் நம்பு

          # பொன்.தாமோ