#குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலையின் சிறப்பு...
ஸ்ரீகுமரகுருபரர் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர் ..குழந்தைப் பருவத்தில் ஊமையாக இருந்த இவர் திருச்செந்தூர் முருகன் அருளால் பேசத்தொடங்கியதோடு பாக்கள் இயற்றும் திறனும் பெற்றார் இவர் பாடிய மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழை கேட்க அன்னை மீனாட்சியே குழந்தையாக வந்து அருள்பாலித்தார் .இவர் தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்த மதுரை மன்னன் தான் செல்லக்கூடிய பல்லக்கில் இவரை ஏற்றிவிட்டு நடந்துசென்று குமரகுருபரரை வழியனுப்பினான் என்கிறது இவர் வரலாறு.
இவர் எழுதிய சகலகலாவல்லி மாலையை தினமும் படித்து வரும் மாணவர்கள் கல்வியில் உயர்நிலை அடைவர்.அந்நூல் பிறந்த கதை குறித்து இங்கு காண்போம்.
குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கு பல மாதங்கள் தங்கியிருந்து கடும் தவம் புரிந்தார் பின்னர்அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார்.அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷா ஜஹான் டில்லி/ஆக்ராவில் முகலாய பமன்னராக இருந்தார்.
அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்ஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வெண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி ‘சகலகலாவல்லி மாலை’யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது.
தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ்மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார்.
அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் சிறப்பு அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் ‘காசிமடம்’ என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது. இப்போதும் அங்கு அந்த மடம் உள்ளது மடத்தின் சார்பாக தமிழ்நாட்டில் திருப்பனந்தாள் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன|...
ஸ்ரீ குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலை
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்து
உண்டா உறங்க ஒழித்தான்பித் தாக உண்டாக்கும் ம்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் அருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோ உளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3
தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென்னே நெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5
பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலும் அன்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய் !உள்ளங் கொண்டு தொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7
சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.
முற்றிற்று.
நவாப் ஆணவத்தை அடக்கிய குமரகுருபரர்.....
.(
எழுத்து சித பாலாவின் நாவலிலிருந்து)
காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் மொகலாயர்கள் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாது பூட்டிக் கிடந்தது.
காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் குமரகுருபரர் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார்.
மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார்.
“கிழவரே… நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது தெரியவில்லை…. எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள்… தருகிறேன்.” – சொல்லிவிட்டு எழுந்து போனார்.
அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது.
ஞானிகள் என்போர்…
எளிமையானவர்கள் எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன் ஏற்பவர்கள்.
எதிரே இருப்பவன் அரசனோ
ஆண்டியோ இரண்டும் ஒன்றுதான் அவர்களுக்கு .
எந்த ஞானியும் தனக்கென்று தானம் கேட்டதேயில்லை , ஞானியின் கைகள் எப்போதும் பிறருக்காகத்தான் தானம் கேட்கும் , ஊருக்காகத்தான் அவர் மனம் யோசனை செய்யும்.
ஞானி எளிமையானவர். அந்த எளிமையைக் கண்டு அவரை இகழ்ச்சியாய் எடை போடக்கூடாது .
மறுநாள்… விடிந்தது.
காசி தேசத்துச் சான்றோர்கள், அவையில் கூடினார்கள்.
பாட்டுப் பாடுகிற வித்வான்களும்,
ஆடல் மகளிரும்,
அரபியில் கவிதை சொல்கிறவர்களும்,
அந்த மொழியில் இறைவன் பெருமை படிப்பவர்களும் ஒன்று கூடினார்கள்.
எங்கே அந்த மதுரைக் கிழவர்…?”
நவாப் விசாரித்தார்.
அவர் அரபி படிக்க போயிருக்கிறார்..”
யாரோ சொல்ல, சபை சிரித்தது.
“அப்படியா… ஆயுசுக்கும் இந்த பக்கம் திரும்ப மாட்டார் என்று சொல்லுங்கள்…”
மறுபடி சபை சிரித்தது.
“அவருக்கு வயது வேறு ஆகிவிட்டது. அரபி மொழியை இறைவனிடம் போய் படிக்க வேண்டும்.” – யாரோ சொல்ல, மீண்டும் சபை சிரித்தது.
“அடடா.. இது தெரிந்திருந்தால் வெறும் கையுடன் அனுப்பியிருக்க மாட்டேனே… வழிப்பயணத்திற்கு ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பேனே…”
“இறைவனை பார்க்கப்போகும் வழிப்பயணத்தில், நவாப் அவர்கள் என்ன கொடுத்துவிட முடியும்..” – ஒரு பெரிய அரபிப் புலவர் சந்தேகம் எழுப்பினார்.
“சில சவுக்கடிகள்…” அவருக்கு உபயம் என உபதளபதி துள்ளிக்கொண்டு சொன்னான்.
மறுபடியும் அந்த நவாபின் சபை கைகொட்டிச் சிரித்தது.
“ஆக… அவர் வரவே மாட்டார் என்று சொல்கிறீர்களா…”
“வரலாம் மன்னா.. இந்துக்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. அந்த மதுரைக் கிழவர் இறந்து மறுபடி பிறந்து இதே காசியில் எருதாக வருவார்.
நவாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “மதுரைக் கிழவர் மிருகமாக வருவார் என்கிறீர்களா…”
“ஆமாம்… ஆமாம்…” என்று அந்த துதிபாடும் சபை சொல்லியது.
வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.
பிடரியும், கோரைப் பற்களும்.. சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது.
குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார்.
அவர் நரைத்த தலைமுடியும், தலைப்பாகையும், வெள்ளை வெளேர் என்று
வயிறு வரை நீண்ட தாடியும், இறையை உணர்ந்த உறுதியான முகமும், போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும்… அவரையும் சிங்கம்போல் காட்டின ,
அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன.
நவாபின் சபை கலைந்து, காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான்.
“என்ன இது…” கத்தினான்.
“நேற்று நீர் அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம்!!”
“இதுவா ஆசனம்… இது சிங்கமல்லவா…”
“இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிம்மம் இருக்கிறது. ஆனால், பொம்மைச் சிம்மம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா…
சிங்கங்கள் சபை முழுவதும் சுற்றித்திரிந்தன .
நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான்
சபை வெறிச்சோடிப் போயிற்று.
துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று.
உலகத்தில் எந்த துதிபாடியும் ஆபத்து காலத்தில் அருகே இருப்பதில்லை.
குமரகுருபரர், “இங்கே வா..” என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன.
நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான்.
குமரகுருபரர் அவனையே
பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவர் கண்கள் சிரித்தன ,
முகச் சுருக்கங்கள் சிரித்தன ,
இதழ்க் கடைகள் சிரித்தன ,
காது வளையங்கள் சிரித்தன ,
அவர் மாலையாய் அணிந்திருந்த உருத்திராட்சைகள் சிரித்தன.
நவாப் சலாம் செய்தான்.
”உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும், என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன்…” மீண்டும் சலாம் செய்தான்.
“தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”
காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும் .
“நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே….
நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே..! “
ஆமாம்! பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி… எப்படி இது சாத்தியமாயிற்று , ?
“இறையருள்.”
எந்த இறைவன்… உங்கள் இறைவனா…”
உன்னுடையது, என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறை எல்லோருக்கும் பொது. எல்லா மொழியும் இறைவன் காலடியில் இருக்கும் தூசு.
“ஒரே இரவில் இறைவன் பயிற்சி கொடுத்தானா?”
ஒரு நொடியில் கொடுத்தான்.
எப்படி ,,, ?
சகலகலாவல்லி மாலை என்றொரு கவிதை நூல் இயற்றினேன். அந்தக் கவிதை நூலில் கலைமகளை வேண்டினேன்.
மறுபடியும் உங்களுக்கு சலாம். காட்டுச் சிங்கங்களையே காலடியில் போட்டு வைத்திருக்கும் உங்களுக்கு இந்த நவாப் எம்மாத்திரம்? காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம்.
கோவிலுக்குள்ளே ஒரு பள்ளிவாசல் கட்டியிருக்கிறோம், அந்தப் பள்ளிவாசல் எங்களுடையதாகவே இருக்க அனுமதி கேட்கிறோம்…”
நவாப் பணிவாகப் பேசினார்.
No comments:
Post a Comment