விபாசனா ஆற்றுப்படை நூலுக்காக எழுதிய முன்னுரை....
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே-
- திருமந்திரம்
பறவைகளுக்கு இரண்டு பிறப்பு உண்டு. முட்டையாக முதல் பிறப்பு. ஓடு உடைத்து சிறகு விரிப்பது இரண்டாவது பிறப்பு ..!
மனிதர்களுக்கும் அப்படித்தான் பெற்றோர் மூலம் பூமிக்கு வருவது முதல் பிறப்பு .அறியாமை ஓடு உடைத்து மெய்ஞ்ஞானம் நோக்கி நகர்வது இரண்டாம் பிறப்பு. இப்பிறப்பு குருவால் மட்டுமே சாத்தியம்.
வடமொழியில் கு-என்றால் இருட்டு, 'ரு-என்றால் ஒளி இருளிலிருந்து ஒளியை நோக்கி அழைத்துச் செல்கின்றவரே குரு எனப்டுகிறார்.
தமிழில் ஆசிரியர் என்போம். ஆசு+இரியர் = ஆசிரியர். ஆசு- என்றால் பிழை, இரியர் - என்றால் நீக்குபவர் .ஆசிரியர் என்பவர் மன மாசுகளை நீக்கி நல்வழிப் படுத்துபவர்..
ஆம் !அப்படி அறியாமை இருளில் பயணித்த என்னை ஒளிமிக்க பாதையில் நடக்க வைத்தவர் கௌதம புத்தரின் விபாசனா பரம்பரையில் வந்த என் குருநாதர் திரு சத்தியநாராயண கோயங்கா ஜி.
அமைதி தழுவும் சாந்தமான முகம்..ஞானம் செறிந்த இனிய சொற்கள்..உடையில் ....நடையில் எளிமை..இன்முகம்....தர்மத்தைத் தவிர வேறு எதையும் பேசாத நா...எதிர்பார்ப்பு இல்லாத அருட்கொடை. -.இதுதான் அவரின் அடையாளம்.
தியான மையங்களில் நடைபெறும் முகாமில் பங்கேற்கும் சாதகர்களிடமிருந்து குறைந்தபட்ச கட்டணம் வாங்கலாம் என்ற ஆலோசனையை முற்றும் நிராகரித்த பெருங்கருணையாளர்.
தம்மம் என்பது விலைமதிப்பற்றது.தேடுகின்ற எவருக்கும் ...தாகத்தோடு வருகின்ற யாவருக்கும் தடையின்றிக் கிடைக்க வேண்டும் என்று நினைத்த பேரருளாளர்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக வழிவழியாக பாதுகாக்கப்பட்டு வந்த விபாசனா என்னும் ஞானப் புதையலைக் எமக்கு வழங்கிய மீட்பர் எங்கள் குருநாதர் என்றால் மிகையாகாது.
குருவிடமிருந்து கற்ற வித்தையால், பெற்ற பயன்களைப் பகிர்தலே, இந்நூலின் நோக்கம்.
தன்னை அறியும் ஆவல் உள்ளவர்களுக்கும் ... முக்திக்கான பாதையைத் தேடுகின்றவர்களுக்கும்.,..நல்ல குருநாதர் கிடைக்க மாட்டாரா? என ஏங்கித் தவிப்போருக்கும்...துன்பங்களுக்கான காரணங்களை அறிய விரும்புகிறவர்களுக்கும்..
துயரங்களிலிருந்து விடுதலை பெற வேட்கை கொண்டவர்களுக்கும்... இந்நூல் நிச்சயம் ஒரு வழி காட்டுப் பலகையாக நிற்கும்...!
"கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுற இச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும் "
என்று ஆற்றுப்படை இலக்கியத்திற்கு இலக்கணம் கூறுகிறது தொல்காப்பியம்.
ஆம்!யாம் பெற்ற இன்பத்தைத் தமிழ் கூறும் நல்லுலகம் பெற வேண்டும் என்னும் வேட்கையே இந்நூல்...!
என் அருமை உறவுகளுக்கும் மாணவக் கண்மணிகளுக்கும்,நண்பர்களுக்கும் விலைமதிப்பற்ற பரிசு ஒன்றை நான் வழங்குவதாக இருந்தால் , அது இந்த "விபாசனா "என்ற தியானத்தை அறிமுகப்படுத்துவதாகத் தான் இருக்கும்.
விபாசனா கற்றுக்கொண்ட பின்பு என் மனதில்.. எண்ணங்களில்... செயல்களில்...சிந்தனையில் என்னுள் ஏற்பட்ட இரசாயன மாற்றங்கள் பற்றிய சிறிய பதிவுதான் இந்நூல்..!
இந்நூலில் இடம்பெற்றுள்ள தியானம் குறித்த தகவல்களை வைத்துக் கொண்டோ அல்லது வேறு யாரோ விபாசனா குறித்துக் கூறியவற்றைப் பின்பற்றியோ யாரும் தியானம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.மேலும் ஓரிரு பத்து நாள் முகாமில் கலந்துகொண்ட சிலர் வியாபார நோக்கில் குறிப்பிட்ட கட்டணம் வசூலித்து விட்டு மூன்று /ஐந்து நாள் பயிற்சியாக விபாசனா கற்றுக் கொடுக்கின்றனர். அத்தகைய முகாம்களில் கலந்து கொண்டாலும் உங்களுக்கு எவ்வித பலனும் கிட்டாது.
விபாசனா தியானம் என்பது விபாசனா தியான மையங்களில் மட்டுமே கற்றுக் கொடுக்கப்படுகிறது. முறைப்படி விண்ணப்பித்து நேரடியாக அங்கு சென்று விபாசனா ஆசிரியர்களிடம் கற்றுக்கொள்வது தான் சரியானது.
தேடல் உள்ள எவருக்கும் இந்த வாழும் கலை கிடைக்கவேண்டும். எல்லோரும் இசைவான மகிழ்ச்சியான பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்ற விழைவே இச்சிறிய நூல்.
புத்தர் உலகிற்கு வழங்கிய தம்மத்தை, ஈராயிரம் ஆண்டுகளாக வாழையடி வாழையென பாதுகாத்து வந்து எமக்கு வழங்கிய விபாசனா பேராசான்களின் ஞானத்திருவடிகளை நன்றியுடன் வணங்கி தொடர்கிறேன்.
அன்புடன்
பொன் தாமோ
மேலும் நூல் முழுமையும் படிக்க..... Amazon Kindle -இல் வாங்கி படியுங்கள். விலை:49
I think you might like this book – "விபாசனா ஆற்றுப்படை (Tamil Edition)" by PON THAMO.
Start reading it for free: https://amzn.in/igIhpVH
No comments:
Post a Comment