Tuesday, July 30, 2019

தமிழ்ச் சான்றோர்களின் அணிந்துரை ...

போதிமரத் தேடல் ...


தமிழ்ச்சான்றோர்களின் அணிந்துரை......
                                           
                 முனைவர் ஹரி விஜயலட்சுமி
                                                                                                           முதல்வர்
                  ஜெ .பீ. கலை மற்றும்           அறிவியல்  கல்லூரி
                        ஆய்க்குடி (2014)


இரசனையுள்ள ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் ...
ஒரு கவிஞன் இருக்கின்றான் ...

அன்றாட நிகழ்வுகளும்
அவை சார்ந்த பார்வைகளும் ..
ஏற்படுத்தும் தாக்கம் தான்
கவிதையின் அடித்தளம் ..

கற்பனை பூச்சோடு
அலங்காரமாய் ஒளிரும்
கவிதைகளிலும் கூட
நிதர்சனத்தின் ஊற்றுக்கண்
ஒளிந்திருக்கும் .

பேராசிரியர் பொன் தாமோதரன்
நல்ல சிந்தனையாளர்...
 கவிஞர் ....
ஆசிரியர் பணியில் ......
தம்மை கரைத்துக் கொண்டவர்.

 இப்பணி சார்ந்த
தன் அனுபவங்களைக்
கவிதைகளாக வடித்திருக்கின்றார்.

 உடன்பாட்டுச் சிந்தனையுடைய
ஒரு ஆசிரியர் மட்டுமே
மாணவனிடம் உள்ளார்ந்திருக்கும்
திறமைகளை ஒளிர வைக்க முடியும்...
 என்ற கருத்து
இக் கவிதைகளின் அடிநாதமாக
ஒலிக்கின்றது ...

நம் கல்விச் சூழல் பற்றிய
விமர்சனமும் கவிதைகளில்
மறைபொருளாக ஒலிக்கின்றது ...

தண்டனைகளால் ஒடித்துப் போடுவதைவிட
அன்பான சொற்களால் ...
மாணவனை வளைத்து ..
வளப்படுத்துவதே ஆசிரியரின் தலையாய கடமை
என்பது ஆசிரியரின் தீர்க்கமான கருத்து..

 ஒவ்வொரு கவிதைக்கும்
இணையான ஆங்கில வடிவத்தையும்
 தருகின்ற புது முயற்சியையும்
கவிஞர் மேற்கொண்டிருக்கின்றார் .
நல்ல சிந்தனைகள்
அனைவரையும் சென்றடைய
மொழியாக்கம் பாலமாக அமைகின்றது
 பேராசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது ..
                         

----------------------'--___------'z-----------'

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின்
முன்னாள் இயக்குநர்
முனைவர் ச.வே.சுப்பிரமணியம் அய்யா
அவர்களின் வாழ்த்துரை .......

.நண்பர் பொன் தாமோதரன்
எழுதியுள்ள ஆசிரியர் மாணாக்கர் பற்றிய  போதி மரத் தேடல் 
என்னும் நூலைப் படித்துப் பெரிதும் மகிழ்ந்தேன் .
அவர் சிறந்த கவிஞர் மட்டுமல்ல;
சிறந்த ஆசிரியராகவும் அவருடைய
நூல் வழி அறிய முடிகிறதுகிறது .
ஆசிரியப்பணி பற்றிய
உன்னதமான எண்ணம் இருப்பதால் தான்
இது போன்ற கவிதைகள்
அவரிடம் தோன்றுகின்றன .
                சட்டத்தால்
                 தலைவர்களால் 
                   அரசால் .......
                     முடியாத சமூக மாற்றம்
                  ஆசிரியர்களால்
                     சாத்தியமாகும் ......
இதில் பொதிந்துள்ள கருத்து மிகுந்த உண்மையாகும் .
நல்லாசிரியர் என்னும் சிற்பிகளால் தான்
 தலை சிறந்த சமுதாயம் படைக்கப் படும் என்பதில் ஐயமில்லை .
ஒரு ஆசிரியர் தன் மாணாக்கரை எவ்வாறு நினைக்க வேண்டும்?
 என்பதைப் பற்றி ஒரு கவிதை .....
         ஆரம்ப பள்ளி மாணவர்களை
          உங்கள் குழந்தைகளைப் போல
            நடத்துங்கள் ......
            மேல்நிலைப் பள்ளி மாணவர்களை
            தோழர்களாக நடத்துங்கள் ....
           கல்லூரி மாணவர்களை
          மன்னர்களாக நடத்துங்கள்...
         மாணாக்கர்கள் பற்றிய உயர்ந்த எண்ணம்
       பாராட்டத்தக்கது.
         அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது
      மனம் தான் .அதைப் பற்றியும் கூறுகிறார் .....


மனம் தான்
மனித வாழ்வை தீர்மானிக்கிறது .
மன வலிமை
மன அமைதி
 மன ஒருமை ....
பயிற்சி அளிப்பதே
மகத்தான கல்வி. ....
என்பதன் மூலம் சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை
 நமக்கு நினைவு படுத்துகிறார் .
குற்றம் செய்யும் மாணவர்களை எவ்வாறு கையாளவேண்டும் ?
அருமையான ஆசிரியர் யார் ? கல்வி எதற்காக?
என்பது போன்ற கேள்விகளுக்கு
 இந்நூல் விடை அளிக்கிறது ..
               தவறு செய்த மாணவரிடம்
                  பெற்றோரை அழைத்து வா
                         கட்டளையிடு வதை விட
                     தானே பெற்றோராகி ..
                       தனிமையில் அறிவுரை வழங்குபவரே
                       அருமையான ஆசிரியர் ......
ஆம்.அனைத்து கவிதைகளும் சிறப்பாக அமைந்துள்ளன .
எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் படிக்க வேண்டிய சிறந்த நூல் .
நூலாசிரியரைப்   பாராட்டி மகிழ்கிறேன் .
இன்னும் இதுபோன்ற நல்ல நூல்கள்
பலவற்றை அவர் உருவாக்க வேண்டும் என கேட்டு வாழ்த்துகிறேன்.

                                        --------------------------------'


                       Rev.Sr.T.ROJAMARY
                     COLLEGE  INCHARGE,
                    J.P.COLLAGE OF ARTS &Science,
                   AYIKUdy.

-------------------                      ------------------------------

Dear Readers,
        A good teaher is one who is able  to bond with his /her students  ,to understand and to resonate  with their feelings and emotions...

          A good teacher has a positive  mental attitude,is flexible and is open to change.

      A good teacher should also be a role model to their students .

A good teacher is someone they can use patience  with their students. They are willing to go over and beyond to help their students.

A good teacher is someone who is organized ,loving ,nurturing ,creative and enjoys helping others .

A good teacher shows concern for her students.

 I. have recognized all these good qualities in Mr .pon.Damodaran ,lecturer in the Department of Tamil in our JP College of Arts and Science .

He is able to turn clay into beautiful  pots .

My sincere prayers and blessings for enthusiastic effort in bringing out this meaningful and thoughtful book .I wish him all the best.


Tuesday, July 23, 2019

புதிய கல்விக் கொள்கை


கல்விக் கொள்கைகளே

 இல்லாத ஒரு காலம் இருந்தது....

 அன்று கல்வி 

உன்னதமான நிலையில் இருந்தது.

 பள்ளிக்கூடங்கள்

 கல்லூரிகள்...

 பல்கலைக்கழகங்கள்....

 இல்லாத காலத்தில்தான்

 திருக்குறள்..நாலடியார்..

ஒளவை குறள்.. நீதிநெறி

உலக நீதி ....ஒப்புயர்வற்ற நீதி 

நூல்கள் தோன்றின....


 கற்றல் என்பது தேர்வுக்கும்...

  வேலைக்கும் அல்ல ...

 வாழ்க்கைக்கு என்கிறார் வள்ளுவர்  

கற்கை நன்றே கற்கை நன்றே

 பிச்சை புகினும் கற்கை நன்றே 

என்கிறது தமிழ் ... 

.ஆனால் இன்றைய சமூகநிலை 

 கற்றபின் பிச்சை போக 

வேண்டிய நிலையில் உள்ளது


 கற்றதை வாழ்க்கையில் கடைப் பிடிப்பதற்கு 

வழி சொல்ல வேண்டும்

 கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக - குறள் 

புதிய கல்விக் கொள்கையில் கற்றதை 

வாழ்க்கையில் கடைபிடிப்பதற்கு 

எந்தத் சிறப்புத் திட்டமும் இல்லை 

. ஆசிரியர்களின் திறன் பற்றி 

கேள்வி எழுப்புகிறது .....

புதிய கல்விக் கொள்கை .


ஆனால் ஆசிரியர்களின்

 திறனை மேம்படுத்த

 அரசு என்ன செய்தது ?

 என்று நாம் கேட்டால் அதற்கு

 பதில் இருக்காது..

நவீன தொழில்நுட்பத்தையும்

 மென்பொருள் அறிவையும் 

கைபேசி மூலமே

 ஒரு மாணவனால்

 கற்றுக்கொள்ள முடியும்...


 இன்றைய

 மாணவ சமுதாயத்திற்கு

 தேவை 

அறம் சார்ந்து வாழும் 

முன்மாதிரி ஆசிரியர்கள்.....

 


பொறியியல் கல்லூரிகள்

பொறியாளர்... 

 இல்லாத காலத்தில்தான் 

கரிகாலனின் கல்லணை ...

தஞ்சை பெரிய கோபுரம் ...

கட்டப்பட்டன ...


கட்டட கலைக்கான வரைபடமும

சூத்திரமும் தமிழ் மொழியில் தான் 

முதலில் தோன்றியிருக்க வேண்டும் ....


ஆனால் 

இன்று  தமிழில்

 பொறியியல்படிக்க முடியாதது  

வெட்கக்கேடானது ...


அதனால்தான்

 தலைசிறந்த 

கட்டடக்கலை பொறியாளர்களை 

புதிய கல்வி முறையால்

 உருவாக்க முடியவில்லை .....


மருத்துவ கல்லூரிகள்

 இல்லாத காலத்தில்

 தான் உலகின் தலைசிறந்த 

சித்த மருத்துவம் தோன்றியது .. இது குறித்து ஆய்வு தேவை.

திருநெல்வேலியில் இருப்பவன் 

என்ன படிக்க வேண்டுமென்பதை 

டெல்லியில் இருப்பவர்கள் 

முடிவு செய்வது

 சரியானதாக இருக்காது...


பாரம்பரிய கல்விமுறை என்கிறார்கள் 

உத்தரப்பிரதேசமும்

 தமிழகமும் ஒரே

 பாரம்பரியத்தை கொண்டவைகளா?


இந்தியா என்பது 

பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு 

பிராந்திய மொழிகளை பாதுகாப்பதற்கு

 எந்த ஒரு திட்டமும்  இல்லை

 குறிப்பாக ...

சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 பிளஸ் டூ

 தேர்வில் அந்தந்த மாநிலத்தின் மொழிப் பாடம்

 கண்டிப்பாக இடம்பெற வேண்டும்


 இது மட்டும் போதாது ...

கலை கல்லூரிகள் 

பொறியியல் கல்லூரிகள் 

மருத்துவக் கல்லூரிகளிலும் 

.மொழிப்பாடம் இடம்பெற வேண்டும் 


தொழில் அறிவையும் 

அறிவியல் அறிவையும்

 பிற மொழிகள்மூலம் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால் 

அறத்தையும் ஒழுக்கத்தையும் 

மொழிப்பாடம் தான் கற்றுக் கொடுக்கும் ....


அறிவியல் ,கணிதம்...

 இந்தியா முழுவதும் மட்டுமல்ல 

உலகம் முழுவதும் ஒரே பாடமாக இருக்கலாம் 

இருக்க வேண்டும்....


மூன்றுவயதிலேயே 

ஆரம்பக் கல்வி என்பது

     அபத்தனமானது .


குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் 

மகிழ்ச்சியும் பறிக்கும் செயல்..

கல்வியில்முன்னோடியாகக் 

 கருதப்படும் பின்லாந்தில் 

 ஆறு வயதில் தான்

ஆரம்பப் பள்ளிக் கல்வி தொடங்குகிறது ..

.

இந்திய அறிவில் துறைக்கு 

அருந்தொண்டாற்றிய தமிழர்களான 

நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமன் 

டாக்டர் சந்திரசேகர், டாக்டர் வெங்கடேசன்.. 

 மற்றும் அறிஞர் அப்துல்கலாம். 

மங்கள்யான் திட்ட இயக்குனர் 

மயில்சாமி அண்ணாதுரை

 சந்திராயன்-2 திட்ட இயக்குனர் அறிஞர்சிவன் ......

அனைவரும் தனது ஆறாவது வயதில் 

ஆரம்பக் கல்வியைத்

 தமிழ் வழியில் தொடங்கியவர்கள்... :

        ... --தொடரும்


Saturday, July 13, 2019

ஐந்தாம் திணை

                    பாலை

முல்லையும் குறிஞ்சியும்
முறைமையின் திரியவில்லை.....

மரங்களை வெட்டியதால்
முல்லையும் .....
மணல் கொள்ளையால்
மருதமும்.....
பாலையென
 பெயர் கொண்டன. ....



ஓவியம்: சுவாதி சரவணன்.

Tuesday, July 9, 2019

மன்னிக்காதீர்


பிதாவே....
இவர்களை மன்னிக்காதீர்
 இவர்கள்
தாம் செய்வது இன்னது என்று
 தெரிந்தே செய்கிறார்கள்


உரத்த சத்தத்தோடு
செய்யும் பிரார்த்தனை ....
சாபமாக கருதப்படும் என்றீர்
ஆனால் இவர்களோ
 உன் திருப் பெயரை ...
ஒலிபெருக்கி மூலமே ஓங்கி பறைசாற்றுகின்றனர் .....


அண்டை வீட்டுக்காரரிடம் அன்பு செலுத்தச்சொன்னீர்
 இவர்கள்
அண்டை வீட்டுக்காரரிடம்
மட்டுமல்ல ....
அண்டை நாடுகளுடன்
ஆயுத்தோடு தான்
பேசுகிறார்கள் .

 சிறியவர்களாகிய இவர்களுக்கு
 எதைச் செய்தீர்களோ ...
அதை எனக்கே செய்தீர்கள்....
 என்றீர்.....
இவர்கள் சிறியவர்களுக்கு
 கொடுப்பதெல்லாம்
சிலசில்லறைகளையும்
செல்லாத நோட்டுகளையும் தான். ..

 கொலை செய்யாதிருப்பாயாக
 என்றீர்
இவர்களோ
வளர்த்த ஆடுகளையும் வறுத்து புசிக்கின்றனர் ....

உன் வலது கை
செய்வது
இடது கை
அழியாதிருக்க கடவது
என்றீர்...

நவீனஅப்போஸ்தலர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு
தொலைக்காட்சி
தொடங்கிவிட்டனர் ...

பிதாவே இவர்களை
மன்னிக்க வேண்டாம்...
தாங்கள் செய்வது இன்னதென்று தெரிந்தே செய்கிறார்கள்...

Monday, July 8, 2019

கவிதை - மாற்றம் ஏமாற்றம்


காலம் மாறி விட்டது


 பசும்புல் மேய்ந்துவிட்டு
 புன்னைமர நிழலில்
படுத்து
அசை போட்ட
காலம் போய் ...
காகிதக் குப்பைகளைத்
தின்றுவிட்டு
நெகிழிக் குப்பைக்குள்
ஓய்வெடுக்கின்றன
நகர பசுக்கள் ....

 தாய்ப் பால்
மறந்த பிஞ்சுகள்
ஆவின் பாலை குடித்துவிட்டு
ஆஸ்பத்திரி தொட்டிலில்
சன் மியூசிக் கேட்டபடி
கிலுகிலுப்பை விளையாடுகின்றன ...

 இப்போதெல்லாம்
குரங்குகள் மனித சேட்டை செய்வதில்லை ....
பொறுப்புடன்
 நடந்து கொள்கின்றன..

 கட்சிக்குக் கட்சி
தாவும் தலைவர்களின் வேகம்
 கிளைக்குக் கிளை தாவும்
 குரங்கின் வேகத்தை விட
அதிகம் ....

 திருடனின் பிஸ்கட் சுவையில்
 நாய்கள் மறந்துவிட்டன....
 நன்றியை .....

அகவிலைப்படி
அந்தப்படி
இந்தப்படி
கைநிறைய பெற்றாலும்
 மேற்படி கொடுத்தால்தான்
 வேலை நடக்கிறது.. .

என் இனிய பூமி - கவிதை



பூமி பூக்களைத்தான்
 பரிசளித்தது ...
ஆனால்
 மனிதனோ
பூக்களுக்கு தீ வைத்து விட்டு
சாம்பலை
 ஆராய்ச்சி செய்கிறான் ...

இயற்கை
தென்றலைக்தான்
அனுப்பி வைத்தது ....
ஆனால் மனிதனோ
காற்றின் முகத்தில்
கரியமிலவாயுவை பூசி விட்டு ..
முகத்தில்
கைக்குட்டையைக்
 கட்டிக் கொள்கிறான்...

 சுத்தமான நீரை தூரலாக அனுப்புகிறது.... வானம்.
 இவனோ  ...
நீரை கூவமாக்கி விட்டு
கடல்நீரை குடிநீராக்குகிறான் ....

இயற்கையை அழித்து
எநத இனமும்
வாழ வேண்டாம்-
இயற்கை காக்க
எத்தனை இனமும்
மரணிக்கலாம்'.... (ஓவியம்: பிரவீன் ராம்)

Sunday, July 7, 2019

கவிதை அன்றும் இன்றும்

அன்று
 ஆரோக்கியம் கொடுத்த
சோளச் சோறும்
அகத்திக்கீரையும்...
 இன்று அந்நியமானது .

கேழ்வரகும்
கம்பங்கூழும் ....
கேட்பாரற்று போனது ...

கும்பாக்களில் குடித்த
கிராமத்து கஞ்சிகள்
 இன்று குடுவையில் ...
விற்பனையாகிறது ....

சோளப் பொரி
பொரிகடலை ...
வறுத்த ஈசல் ..
சேர்த்துக் தின்ற
 நொறுக்குத் தீனி
 இன்று அப்பளமாய்
சுருங்கிப்போனது ...

அதனால்
சர்க்கரையும்
ரத்த அழுத்தமும்
 ஏழையின் வீட்டுக்கும்
விருந்தாளியானது.

வயது 70 ஆன பின்பும்
 வான் தொடும் பனையேறி
பதநீரும் நுங்கும்
 பக்குவமாய். ..
 இறக்கி தந்த -
தாத்தாக்களை
புதைத்த இடத்தில்
புல் முளைத்து விட்டது .

பதநீர் குடிக்கவே
பலமில்லாத
பதினாறுகள்
படையெடுக்கிறது
டாஸ்மாக் கடைக்கு...

 வாய்க்கால் தண்ணீரையும்
 வயல் தண்ணீரையும் . .
தாகம் எடுக்கும் போது
வயிறு முட்ட குடித்தோம்
வாந்திபேதி வந்ததில்லை..
 வைத்தியர் பக்கம் சென்றதில்லை

ஏர் உழும் கலப்பை
தண்ணீர் இரைக்கும்
கூனை ...
மாடு பிடிக்கும் வடம்
மரக்கட்டை சக்கரம் கொண்ட
 மாட்டு வண்டி ...
கிணறுகள் தோறும்
 இருக்கும் கமலக்கிடங்கு
அறிவியல் வளர்ச்சியால்
 அனைத்தையும் தொலைத்தோம்... தொலைத்தது சரிதான் .

ஆரோக்கியத்தையும்
ஆனந்தத்தையும்
 எதனால் இழந்தோம்
என்றாவது
 சிந்தித்தோமா '.....?

Saturday, July 6, 2019

சுதந்திரம் - கவிதை

சுதந்திரம் ..

தொட்டி செடிகளின்
ஆணிவேர்
பூமியைத் தொடுவதில்லை

 காட்டு மரங்களின் வேர்கள்
எல்லை யின்றி
பயணிக்கும் ......

கூண்டுக்குள்
வாழும் பறவைக்கு
கூடு கட்ட தெரியாது. .

வளர்ப்பு சிங்கத்தால்
வேட்டையாட முடியாது ...

ஓவியம     மாணவி _ ரிதன்யா

இழப்பதற்கு எதுவும் இல்லை

பெறுவதற்கு பொன்னுலகுஉண்டு . ...


 முதலாளித்துவத்தை
 பேனா முனையால்
முட்டி.... முட்டி....
சாய்த்த கதை ...
தனி ஒரு மனிதன்
 தன் கருத்தை
பேனா முனையால் ...
தொழிலாளர்களின் இதயத்தில்
 குத்தி குத்தி தைத்த கதை ......
அதுதான் காரல் மார்க்சின் கதை ....'


1818இல்
 ஜெர்மனியின்
 ரைன் நதிக்கரை நகரத்தில்
ஹெர்ஷல் மார்க்ஸ் - ஹென்ரிட்டா தம்பதியருக்கு
 பிறந்த தவப்புதல்வர் தான்
காரல்மார்க்ஸ்

 எல்லா குழந்தையும்
 தன் பசிக்காக அழுதபோது...
பிறக்கும்போதே பிறர் பசிக்காக
அழுத குழந்தை இது ..


பள்ளிப் படிப்பு ...
கல்லூரி படிப்பு ...
மான்செஸ்டரில் நூலகப் படிப்பு ....
படிப்பு ...படிப்பு....
 பகல் இரவு பாராத படிப்பு ....
மாரக்சை
 மாமேதை ஆக்கியது

இளமைக்காலத்தில் ...
மார்க்ஸ்
 வாய்திறந்தால்
ஷேக்ஸ்பியரின் கவிதையும்
 ஜென்ரிச்ஹெய்னேயின் கவிதையும்
அருவியாய் கொட்டும் ..

அவ்அருவியில் ....
நனைந்து நனைந்து...
.கரைந்து கரைந்து
காதலியானால் ஜென்னி .....



வாரப்படாத தலை
ஒழுங்கில்லாத தாடி
கரடுமுரடான தோற்றம் ...
காரல்மார்க்ஸ் அடையாளம்

பேரழகும் பேரறிவும்
சேர்த்து  செய்த செப்புச் சிலை
 பிரபு குடும்பத்தின் வாரிசு ஜென்னி
எரிமலையின் இதயத்திற்குள்
இடம்பெயர்ந்தது இந்த ரோஜா ....

மார்க்ஸ் இதயத்தில்
சிறு கனவாக இருந்த
 பொதுவுடமை சித்தாந்தம் ....
ஜென்னியின் அன்பால்
 ஊழித்தீ ஆனது ....

சோம்பேறி தேனீக்களை உழைக்கும் தேனீக்கள் அழித்துவிடும் ....
,ஆனால் மனிதர்களில் சோம்பேறியாக இருப்பவர்கள் உழைக்கும் மக்களை அழித்து விடுகிறார்கள்.... என்றார்

உலக தொழிலாளர்களுக்காக
உரத்த குரலாக
ஒலித்தது அவர் குரல்...
 ஜெர்மனியின் முதலாளிவர்க்கம்
 முறைத்தது .....
சிங்கத்தை சிறைபிடித்தது...
 மன்னிப்பு என்ற ஒற்றைச் சொல்லை
 ஒருமுறை சொல் ...
விடுதலை என்றது

மார்க்ஸ் மறுத்தார்
ஜெர்மன் நாடு கடத்தியது
 பெல்ஜியத்துக்கு


27 வயது இளைஞனை
 கண்டு பெல்ஜியத்தின்
 அதிகார நரம்புகள் நடுங்கின
 பேனாவை தொட்டால்
 பெருஞ்சிறை என்றது...


சுற்றும் பூமி நிற்கலாம்
சுடரும் சூரியன் அணையலாம்
உழுபவனுக்கே
 நிலம் சொந்தம் ஆகும் வரை
வியர்வை சிந் தியவனுக்கு
 வீடு சொந்தமாகும் வரை ...
என் பேனாவுக்கு
ஓய்வு இல்லை ...
முழங்கினார் மார்க்ஸ்

நீயூயார்க் டெய்லி டிரிப்யூன்
இதழில்......
 இமைகள் கருக
இரவு பகலாய்
விடிய விடிய .....
விழித்திருந்து
 500 கட்டுரைகள் எழுதினார்
மார்க்சின் சிந்தனை
காட்டுத் தீயானது.



மார்க்ஸின்
விமர்சன அம்புகள்
குறி தவறாமல் ...
முதலாளி வர்க்கத்தின்
மூளையை தைத்தது
மிரட்டிய கூட்டம் மிரண்டது ...
பாய்ந்த கூட்டம் பயந்தது ...

15 ஆண்டு உழைப்பு
பல்லாயிரம் நூல்கள் படிப்பு
பயனாய் விளைந்தது மூலதனம்
 எனும் படைப்பு ....

பூவுலகின்
புதிய சூரியனாய்
1867 செப்டம்பர் 14 மூலதனம்
 முதல் தொகுதி வெளியானது
தூங்கிக்கொண்டிருந்த
 தொழிலாளர்கள் கூட்டம்
 துடித்து எழுந்தது ...
விண்ணதிர வீறு நடை போட்டது..

 முதலாளித்துவத்தின்
 முதுகெலும்பை உடைக்க
மூலதனம் ....மூலதனமானது .

இழப்பதற்கு எதுவுமில்லை
பெறுவதற்கு ஒரு பொன்னுலகு உண்டு
மார்க்ஸின் மந்திரச்சொல்
தொழிலாளர்களுக்கு
தாரக மந்திரமானது....
அணுக்களில் ஊடுருவியது
அதுவே புரட்சியாக வெடித்தது
 விடுதலையை வென்றது
.....
ஏழ்மையும் வறுமையும்
பசியும் ....
காரல் மார்க்ஸ் குடும்பத்தைத்
 தின்றது .......
உணவின்றி ஒட்டிய
வயிற்றுடன்
நோயோடு போராடிய
முதல் மகனை
ஒரு வயதில் மரணம்
 கொத்திச் சென்றது...

ஏழ்மை தாங்காது
 எட்டாவது வயதில்
எட்கர் என்னும்
இன்னொரு மகனும்
மரணத்தின் வாயில் விழுந்தான்...

மூன்றாவது குழந்தை
பசியோடு ஜென்னியின் தனத்தை
பற்றியபோது ....
பாலுக்கு பதில் ரத்தம் கசிந்தது ....
அதுவும் மாண்டது
பிரபு குடும்பத்தில் பிறந்த
பெருமாட்டி
சொன்னாள் ...
என் குழந்தை பிறந்தபோது
 தொட்டில் வாங்க முடியவில்லை ...
இறந்தபோது ...
சவப்பெட்டி வாங்க முடியவில்லை
 என்று....

 இன்று உலகில்
மொத்த மக்கள் தொகையில்
மூன்றில் ஒரு பங்கினர்
பொதுவுடமை கொள்கையினராம் ..

1883 ஆம் ஆண்டு மார்க்ஸ்
 மரணமடைந்தபோது
இறுதிச்சடங்கில்
கலந்து கொண்டவர் எட்டு பேர்....

Friday, July 5, 2019

கட்டுரை நினைப்பது முடியும்


      நினைப்பது முடியும்


 மனிதன் தன் தலைவிதியைத் தானே தீர்மானிக்கிறான் என்கிறார் கௌதம புத்தர்.
 நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்  என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் – குறள்
  முயன்றால் முடியாதது எதுவுமில்லை. விடாமுயற்சியே மனிதனை மாமனிதனாக ஆக்குகிறது. வெற்றியின் இரகசியம் விடாமுயற்சியே. தண்ணீருக்குள் விழுந்த முதல் மனிதன் உயிர் பிழைத்தது முயற்சியால்தான். முயற்சியின் தேவை, இன்றியமையாமை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
விடாமுயற்சி

  “தூங்கும்போது
  காண்பது அல்ல கனவு
  உன்னை தூங்கவிடாமல்
    செய்வதுதான் கனவு” - அப்துல் கலாம்

ஆம் ! கனவு என்பது நம் ஒவ்வொரு அணுக்களிலும் கலந்துவிட வேண்டும். அப்போது தான் வெற்றி சாத்தியமாகும்.
 சச்சின் டெண்டுல்கர் சாதனைபடைத்ததும், ஆபிரகாம்லிங்கன் அமெரிக்க அதிபர் ஆனதும், விடாமுயற்சியால்தான்.

‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது வெறும் வார்த்தையல்ல சத்தியம். ஆயிரம் தோல்விகளை சந்தித்தப்பின்பே எடிசன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக்கண்டுபிடித்தார்.


         தேனீக்கள் தேன் சேகரிப்பதும், எறும்புகள் தானியங்கள் சுமப்பதும், எத்தனைமுறை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து சிலந்தி வலைப்பின்னுவதும் இயற்கை நமக்குக்கற்றுக்கொடுக்கும் கடின உழைப்புக்கான பாடங்களாகும். ‘மீனவ குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக’ ஆனதும், ‘டீக்கடை’ நடத்திய மோடி பிரதமரானதும் கடின உழைப்பால் தான் .
உழைப்பில்லாமல் உயர்வில்லை.

 நம்பிக்கை... நம்பிக்கை...
கொண்ட இலட்சியத்தில் முழுமையான நம்பிக்கை இதுதான் வெற்றியின் ரகசியம்.

வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம் - தாராபாரதி

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குச்சிறந்த முதலீடு நம்பிக்கை; கூடுதல் முதலீடு கடின உழைப்பு; காற்று இல்லாமல் மூன்று நிமிடம், நீரில்லாமல் மூன்று நாள் வாழ முடியும், உணவு இல்லாமல் முப்பது நாள் வாழ முடியும் ஆனால் ‘நம்பிக்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது’.

    பறவைகளைக்கண்டான்
 விமானம் படைத்தான்
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்.....

கனவு மெய்ப்படும்

ஆம்   ஒரு கனவு வேண்டும். அதை தினம் தினம் நினைக்க வேண்டும்; அதற்காகதினம் உழைக்க வேண்டும்; அவ்வாறு செய்தால் கனவு மெய்ப்படும். ரைட் சகோதரர்கள் விமானம் கண்டு பிடித்ததும், சார்லஸ் பாபேஜ் கணினியை கண்டுபிடித்ததும் அப்படித்தான். நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை....; உழைப்பு… உழைப்பு… உழைப்பு… இதுவே கணவை மெய்ப்பட வைக்கும்.


வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
 உள்ளத் தனையது உயர்வு – குறள்

 நீர்நிலைகளில் தண்ணீர் உயரம் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவுதான் தாமரைத் தண்டின் உயரமும் இருக்கும். அதுபோல் நம் எண்ணம் எந்த அளவுக்கு உயர்வாக இருக்கிறதோ, அதே அளவு வெற்றியும் இருக்கும். அதனால்தான், பாரதியும் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்று பாடினான். நாம் நினைப்பது எல்லாம் உயர்வாக நினைக்க வேண்டும். நம் நாட்டு  அறிவியல் அறிஞர்களுக்கு உயர்ந்தகுறிக்கோள் இருந்ததால்தான் , நிலவிற்கு சந்திராயன், செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்பமுடிந்த்து.

போராடும் குணம

 ஆபிரகாம் லிங்கன் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை தேவாலயத்திற்குச் சென்றார். வழிபாடு முடிந்ததும், பாதிரியார்,  “யாரெல்லாம் பரலோக ராஜ்ஜியத்திற்குள் செல்ல ஆசைப்படுகிறீர்கள் ? ” என்று கேட்டார். லிங்கனைத்தவிர அனைவரும் கை உயர்த்தினர். பாதிரியார் , “ ஆபிரகாம் நீ எங்கே செல்ல போகிறாய் ? ”  என்று கேட்டார். அதற்கு லிங்கன், “நான் வெள்ளை மாளிகைக்குள் அதிபராக செல்ல வேண்டும் ” என்று கூறினார். சொன்னதை பின்னாளில் செய்துகாட்டினார்.

சுற்றும் வரை பூமி
சுடும் வரை நெருப்பு
 போராடும் வரை மனிதன்
 நீ ஒரு மனிதன் - வைரமுத்து

இலட்சியத்தை வென்றெடுக்க போராடும் குணம் மிகவும் அவசியம் காலில் மிதிபட்ட எறும்பு துடிப்பது வலியால் மட்டுமல்ல; வாழ்வதற்காகவும் தான். வாஞ்சிநாதன், மகாத்மா காந்தி,  பகத்சிங் போன்ற ஆயிரக்கணக்கான மாவீர்ர்களின் போராடும் குணமே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது.


தன்னம்பிக்கை

நவீன அறிவியல் தந்தை எனப் போற்றப்படும் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கின்ஸ் தன்னம்பிக்கையின் சிகரமாக திகழ்ந்தவர். கழுத்தில் இருந்து அனைத்து உடல் உறுப்புகளும் செயலிழந்தும் ஆராய்ச்சி செய்வதை விட வில்லை. கண் அசைவின் மூலம் அறிவியல் கருத்துகளை பதிவு செய்தார். கருத்துகளை உமிழும் கதிர்வீச்சு பற்றிய அவரது கண்டுபிடிப்பு அறிவியல் உலகை வியப்படையச் செய்தது.
 தன்னம்பிக்கையின் மறு உருவமாகவே ஹெலன் கெல்லருக்கு காது கேட்காத வாய் பேச முடியாத கண் பார்வை கிடையாது. ஆனாலும் அவரால் சிறந்த எழுத்தாளராக, சிந்தனையாளராக முடிந்தது. இது தன்னம்பிக்கையால் மட்டும் சாத்தியமே!!



தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் – குறள்
தெய்வத்தால் முடியாதது காரியமும் கூட முயற்சியால் முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை முயற்சி திருவினையாக்கும் முயற்சி செய்வோம் பயிற்சி செய்வோம் ....வெற்றி பெறுவோம்....

மேலும் இதுபோன்ற கட்டுரைகளை படிக்க
I think you might like this book – "பொதுக்கட்டுரைகள் (Tamil Edition)" by பொன் தாமோ.

Start reading it for free: https://amzn.in/hIJcOAG









கவிதை உயில்...

        உயில்


 இறந்த பின், ..
என்னை
 எரிக்கவும் வேண்டாம்
புதைக்கவும் வேண்டாம் ..,,

என் உடம்பில்
உதிரம் உறையாமல் இருக்குமாயின்
 உடனே எடுத்து விடுங்கள்.....

 என் கண்களில்
ஒளி இருக்குமாயின்
 பக்குவமாக பார்த்து எடுங்கள் பார்வையற்ற ஒருவருக்கு
பயன்படட்டும் ........

என் தசைகளை நறுக்கி
பசித்த பருந்துகளுக்கு
வீசி எறியுங்கள் .......

 மிஞ்சிய எலும்புத்துண்டுகளை என்
 வீட்டு நாய்களுக்கு கொடுங்கள்......

  என் இதயத்தை மட்டும்
 பத்திரமாக வைத்திருங்கள்
 ஏனெனில்
 அதில் பாரத மாதா வீற்றிருப்பாள். ...

Thursday, July 4, 2019

போதிமரத் தேடல் - பாகம் 1

முன்னுரை

        வரலாற்றில் ஒரு நாள்
      அரிஸ்ட்  டாட்டிலும்
      அலெக்சாண்டரும்....
      அடர்ந்த காட்டு வழியே 
       பயணித்தார்கள்....

     குறுக்கிட்டது ஆழமான ஆறு...
     கொஞ்ச நேரம் திகைத்தனர்..
      ஆசானை முந்திக்கொண்டு
        ஆற்றில்  இறங்கினான்..,, 
         அலெக்சாண்டர்...
     இரண்டொரு நிமிடத்தில்
   இருவரும்
   மறு கரையை அடைந்தனர்....

 இதுவரை
அமைதியாய் வந்த
ஆசிரியர்....
 ஆக்ரோசமாய் சீறினார்
ஆசிரியரைப் பின்தொடர்ந்து...
 மாணவர் செல்வதுதான்
 மரபு
 அதை நீ உடைத்தாய்
இளவரசன் என்பதால்
 இறுமாப்பு கொண்டாய்
......என்று .

அலெக்சாண்டர்
அரச பணிவுடன் ...
பதில் சொன்னான் ....
ஆற்று வெள்ளத்தில் சிக்கி
 அடியேன் செத்தால் .....
நூறு அலெக்சாண்டர் களை
நீங்கள் உருவாக்குகிறீர்கள்..'

  வெள்ளத்தில் நீங்கள் இழுத்துச்         செல்லப்பட்டால்
ஆயிரம் அலெக்சாண்டர்
சேர்ந்தாலும் ....
ஒரு அரிஸ்டாட்டிலை
உருவாக்க முடியாது ...

ஆம் அன்று...
        குருகுலக்கல்வியில்
         மானுடத்தின் ஆணிவேராகயிருந்து            மனித குலத்திற்கு ....
          மகுடங்களை சூட்டியவர்கள்           ஆசிரியர்கள்.....

 இன்று ........
        அநியாயம் செய்வார்
         ஆசிரியர் .....
         கொலையும் செய்வான்
          மாணவன் ....
         என்ற இழிநிலை


 ஆசிரியர் மாணவரிடையே
   உள்ள
   தன்முனைப் பென்னும் (ஈகோ)
  தடை உடைய வேண்டும்

    உணர்வு நிலையில்....
      ஒவ்வொரு ஆசிரியரும்          மாணவர்களுக்கு
        தாயாக தந்தையாக
       தோழனாக ...
      திகழவேண்டும்

      கற்றல் என்பது
     திணிக்கக்கூடியதாக அல்ல
     இனிக்க கூடியதாக ...
      சுமையல்ல ...
      சுவை யாக ...
     மாற வேண்டும்
     அதற்கான தேடல் தான்
       இச்சிறு நூல் ....,,,


ஃ .. ...................................... ..........................

..
ஆசிரியர் பணியை
 வாழ்க்கைத் துணையாகவும்    மாணவர்களை
குழந்தைகளாகவும் கருதும்போது வகுப்பறையே பல்கலைக்கழகம் ஆகிவிடுகின்றது ....


   ஆரம்பப் பள்ளி மாணவர்களைக்
 குழந்தைகளைப் போல
 நடத்துங்கள்...
 மேல்நிலைப் பள்ளி
 மாணவர்களைத் தோழர்களாக நடத்துங்கள்
 கல்லூரி மாணவர்களை
மன்னர்களாக நடத்துங்கள்.....

 புத்தகத்தை மட்டும்
 படிப்பவர்கள் மாணவர்கள் ....
புத்தகத்தோடு மாணவர்களையும் படிப்பவர்கள் ஆசிரியர்கள்...

 ஆசிரியர் வழிபடும்
 தெய்வமானால் ....
 கற்றல் கொண்டாட்டமாகும் ....
 தேர்வு திருவிழாவாகும்....

 தியானமும் யோகமும்
 தினசரி பாட மானால்
மாணவ இதயங்கள் ...
அன்பின் அதிர்வலையால்...
 நாளும் நிரம்பும்...

 ஆசிரியர் ஏணியாக
 மட்டுமல்ல
ஏறுபவராகவும்
இருக்க வேண்டும்
    தோணியாக மட்டுமல்ல
சமுத்திரத்தில்
பயணிப்பவராகவும்....
இருக்க வேண்டும் .....

தாயின் கருவறை
 மனிதனை உருவாக்கும்
 ஆசிரியரின் வகுப்பறை
 மனிதனை மாமனிதனாக
உருவாக்கும்....


மாணவர்களால்
 நேசிக்கப்படுபவர்
 மாணவர்களை
 நேசிப்பவர்
அவரேசிறந்த ஆசிரியர் ....

மாணவர்களை
தினம் தினம் படி படி
என்பவரல்ல.,
தான்
 தினம் தினம் படிப்பவரே
 திறமையான ஆசிரியர்


 மாணவர்களின்
  குறைகளை மட்டுமே
  பேசாமல்
   தன் குறைகளையும்
    ஆராய்ந்து
    தன்னை வளர்த்துக்
    கொள்பவரே
   சரியான
      ஆசிரியர்


    ஊதியத்திற்காக
    உழைக்காமல்
    மாணவர்களின்
      உயர்வுக்காக   
       உழைப்பவரே
     உயர்ந்த ஆசிரியர்...

   மாணவர்களை
மன்னிக்கும் ஆசிரியர்
மகாத்மாக்களை
உருவாக்குகிறார் .....
தண்டிக்கும் ஆசிரியரோ குற்றவாளிகளை
உருவாக்குகிறார் ....

     மாணவர்கள்
    கைப்பேசிகளின் கைதிகள் ஆகிவிடாமல் ...
  ஞானவானில்
அறிவு சிறகை விரிக்க
ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.. _


 வகுப்பு நேரத்தில்
   கற்றுக்கொடுக்காமல்
    காலத்தை வீணடிப்பது
களவுக்குச் சமம்...

முரட்டு காளையை
 கொம்பு பிடித்து
அடக்குவதைவிட
புல்லைக் கொடுத்து
அடக்குவது எளிது ...
முரட்டு மாணவனுக்கு .. தேவைதண்டனையை
அல்ல ..
 பாராட்டு .. வாழ்த்து
           "............ தொடரும் .......




புதிய கல்வி ஆண்டின் முதல் நாள்.,,,

புதிய கல்வி ஆண்டின்
முதல் நாள்.....
.............................
நாம் சந்திப்பது
மாணவர்களை அல்ல
நாளைய மாமனிதர்களை'..
 பெருமித உணர்வோடு மாணவர்களை வரவேற்போம்.,,,,

ஊதியம் சொற்பமாக
இருக்கலாம் ....
மாணவர்கள் மதிக்க
தவறலாம் ....
சமுகம் கேலி செய்யலாம்...

 ஆயினும் ..
அவமானங்களை
அடி உரமாக்கி
ஆசிரியப் பணியை
ஆக்கமுடன் தொடர்வோம்!

மாணவர்கள் ஆசிரியர்கள் மீது
 வைப்பது அல்ல ....
 ஆசிரியர்கள் வேலையின் மீது வைப்பதே உன்னதமான குருபக்தி ...

மருத்துவர்
பொறியாளர்
மென்பொருள்வல்லுநர்களை விட
நல்ல மனிதர்களாக
செதுக்க உறுதிகொள்வோம்....

நன்றியுணர்வு
பொறுமை
மனிதநேயத்தை....
போதிப்பதனால்
கற்றுக் கொடுக்க முடியாது
கடைப்பிடிப்பதன் மூலமே
கற்றுக் கொடுக்க முடியும்.

 கற்கள்  படிக்கல்லாக
 மாறுவதும்...
கடவுள் சிலையாவதும்....
 சிற்பியின் கையில் ..

மரக்கட்டைகளை
ஆழ்கடல் நீந்தும்
படகுகள் ஆக்குவதும்.,,, விறகுகள்ஆக்குவதும்
நம் கையில்....


வினா - விடை
 படிப்பதும்
மதிப் பெண் எடுப்பதுமான
எந்திரத்தனமான கல்வியிலிருந்து மாணவனை விடுவிப்போம் ...


ஆசிரியர் நாம்
தினமும் படிப்போம் ...
பாடப்புத்தகத்திற்கு வெளியே..,,
பரந்து விரிந்து கிடக்கும் ஞான வெளிக்குள்
 நாளும் பயணிப்போம்.,,,

,, வாழ்க வளமுடன் .. அன்புடன்
             - தாமோ

கவிதை. சிங்கம் அல்ல நான் ...

அழைத்துச் சென்றார்கள்
பசும்புல் கிடைக்கும் என்று
 பசியோடு நடந்தேன்....
 என் குழந்தையின் தலையை அறுத்து தட்டில் வைத்திருந்தார்கள்..... தோலை உரித்து தொங்க விட்டிருந்தார்கள் ... தசைகளை துண்டு துண்டாக நறுக்கி கூறு  வைத்திருந்தார்கள் ....
 என்னுள் பால் சுரந்த காலத்தில் அருகம்புல் லோடு .....
அகத்திக்கீரையும் கொடுத்தவர்கள் ......
இப்போது கத்தியை தீட்டுகிறார்கள்.... என் காம்புகளை அறுக்க.....
.... சீறிப்பாய சிங்கம் அல்ல நான். .!